காஞ்சிபுரம் அருகே மின்சாரம், குடிநீர் தட்டுப்பாடு பொதுமக்கள் சாலை மறியல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கோனேரிக்குப்பத்தில் மின்சாரம், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் பகுதி மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் அடுத்த கோனேரிக்குப்பம் ஜெ ஜெநகரில் குடியிருப்பு உள்ளது. இங்கு, பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு மின்சாரம் வருவதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை வழக்கம்போல் மின்சாரம் தடை செய்யப்பட்டது. இதனால் பகுதி மக்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகினர். இதன்காரணமாக, குடிநீர் விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து குடிநீர் விநியோகம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்தனர். ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட மக்கள், சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பொன்னேரிக்கரை பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை யில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்ததும் பொன்னேரிக்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜெஜெநகர் பகுதி மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மின்சாரமும், குடிநீரும் முறையாக வழங்க அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இதையடுத்து அனைவரும் மறியல் கலைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து போக்குவரத்து பாதிப்பை சரிசெய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். மறியல் காரணமாக 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories: