திருத்தணி முருகன் கோயிலில் காலாவதியான பிரசாத பொருட்கள் பறிமுதல்: கோயில் நிர்வாகம் நடவடிக்கை

திருத்தணி: திருத்தணி முருகன் கோயில் வளாகத்தை சுற்றியுள்ள தனியார் கடைகளில் தேதி குறிப்பிடாமல் பிளாஸ்டிக் பாட்டில், பாலிதீன் கவர்களில் அடைத்து விற்பனை செய்த காலாவதியான பஞ்சாமிர்தம், கற்கண்டு, பேரிச்சம்பழம், சிப்ஸ் போன்ற உணவு பொருட்களை இன்று காலை திருக்கோயில் கண்காணிப்பாளர் சித்ராதேவி தலைமையில் கோயில் ஊழியர்கள் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

தமிழ்நாட்டில் முதல்வர் விஜய் தலைமையில் தவெக அரசு பொறுப்பேற்றதும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக ரமேஷ் என்பவர் பொறுப்பேற்றார். இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் அமைச்சர் ரமேஷ் தீவிர ஆய்வு நடத்தி வருகிறார். குறிப்பாக, அந்தந்த கோயில்களில் விற்பனை செய்யப்படும் பிரசாதங்களில் தேதி குறிப்பிடாமல் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவது அமைச்சரின் ஆய்வில் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருத்தணி முருகன் கோயில் இணை ஆணையர் ரமணி உத்தரவின் பேரில், கோயில் கண்காணிப்பாளர் சித்ராதேவி, கோயில் பேஸ்கர் அன்பழகன் மற்றும் கோயில் ஊழியர்கள் இன்று காலை திருத்தணி முருகன் அமர்ந்துள்ள மலைக்கோயில் வளாகத்தில் பல்வேறு தனியார் பூஜை பொருட்கள் மற்றும் உணவுபொருள் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு செய்து, அதிரடி சோதனை நடத்தினர். இந்த ஆய்வில், பெரும்பாலான தனியார் கடைகளில் பிளாஸ்டிக் டப்பாவில் அடைக்கப்பட்ட பஞ்சாமிர்தம், பாலிதீன் கவர்களில் இருந்த கற்கண்டு, பேரிச்சம்பழம், சிப்ஸ் போன்ற பிரசாத பொருட்கள் உற்பத்தி மற்றும் காலாவதி தேதி குறிப்பிடப்படாமல் விற்பனை செய்யப்பட்டு வருவதை கோயில் அதிகாரிகள் கண்டறிந்தனர்.

மேலும், அக்கடைகளில் காலாவதியான நிலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த பிரசாத பொருட்களையும் கோயில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், கடைகளில் காலாவதியான பிரசாத பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. அனைத்து பிரசாத பொருட்களிலும் உற்பத்தி மற்றும் காலாவதி தேதிகள் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Related Stories: