அரசுத்துறை காலிப் பணியிடங்கள் உடனே நிரப்பி இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

 

சென்னை: ஒரே நாளில் 5,000 பேர் ஓய்வு: 5 லட்சத்தைக் கடந்த அரசுத்துறை காலிப் பணியிடங்கள் உடனே நிரப்பி இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார். மே மாதத்தின் கடைசி பணி நாளான நேற்று மட்டும் தமிழக அரசுத் துறைகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணி ஓய்வு பெற்றுள்ளனர். அதனால் ஏற்பட்ட காலியிடங்களையும் சேர்த்து அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசுத் துறைகளில் 41.7% பணியிடங்கள் காலியாக இருப்பது அரசு நிர்வாகத்தை நிலைகுலையச் செய்து விடும்.

தமிழ்நாட்டில் அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் 12 லட்சத்திற்கும் கூடுதலான பணியிடங்கள் உள்ளன. அவற்றில் கடந்த காலங்களில் ஏற்பட்ட காலியிடங்களை நிரப்ப ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்காததன் விளைவாகத் தான் காலியிடங்களின் எண்ணிக்கை இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 50 ஆயிரம் அரசுப் பணியிடங்கள் காலியாகின்றன. ஆனால், அவற்றில் 10 ஆயிரம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படுகின்றன. இதனால் கடந்த 20 ஆண்டுகளாகவே காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை. அரசுப் பணிகளுக்கு போதிய எண்ணிக்கையில் ஆட்கள் தேர்வு செய்யப்படாததால், படித்த இளைஞர்களுக்கு அரசு வேலை என்பது எட்டாக் கனியாகிவிட்டது.

தமிழ்நாட்டில் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான த.வெ.க. அரசுத்துறைகளில் உள்ள அனைத்து காலியிடங்களும் நிரப்பப்படும் என்று வாக்குறுதி அளித்திருக்கிறது. பல ஆண்டுகளாக அரசு வேலை கிடைக்காததால் லட்சக்கணக்கான இளைஞர்கள் விரக்தியில் வாடிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் வாட்டத்தைப் போக்கும் வகையில் அரசுத் துறை காலியிடங்களை நிரப்பி இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: