வாக்களிப்பதன் அவசியம் குறித்து டூவீலர் விழிப்புணர்வு பேரணி

அரியலூர், மார்ச் 4: அரியலூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து இரு சக்கர வாகனப் பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான ரத்னா கொடியசைத்து துவைக்கி வைத்தார். இந்திய தேர்தல் ஆணையம், வரும் சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021முன்னிட்டு தேர்தலில் 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த உத்தரவிட்டுள்ளது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், பல்வேறு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், மாவட்டத்திலுள்ள கல்லூரிகளில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், மாணவ, மாணவியர்களைக் கொண்டு பேச்சு, கவிதை, கட்டுரை உள்ளிட்ட பிரிவுகளில் வாக்காளர் வாக்களிப்பதின் அவசியம் குறித்த போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிநவீன மின்னணு விளம்பரத்திரை வாகனம் மூலம் கடந்த காலத்தேர்தல்களில் குறைவான வாக்குப்பதிவான வாக்குச்சாவடி மையங்களுக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்திய தேர்தல் ஆணையத்தால் தயாரிக்கப்ட்ட குறும்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் நேற்று (3ம்தேதி) இருசக்கர வாகனங்களில் வாக்காளர் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை ஒட்டி, இரு சக்கர வாகனப் பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் ரத்னா கொடியசைத்து துவைக்கி வைத்தார். பேரணியில் பல்வேறு விழிப்புணர்வு அடங்கிய பதாகைகள் ஏந்தி காமராஜர் திடல் வரை 200க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்றனர். நிகழ்ச்சியில், வட்டார போக்குவரத்து அலுவலர் பிரபாகர், மோட்டார் வாகன ஆய்வாளர் பெரியசாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சரவணன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: