குழந்தைகளுக்கு தேவையற்ற மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு மும்மொழி கல்வியை கட்டாயமாக்குவதா? ஒன்றிய அரசுக்கு எதிராக முதல் முறையாக குரல் எழுப்பிய அண்ணாமலை: பாஜவினர் கடும் அதிர்ச்சி

 

சென்னை: தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலையின் சமூக வலைத்தள பதிவு: 2026 ஏப்ரல் மாதம், சிபிஎஸ்இ அமைப்பு, மாணவர்களுக்கு 6ம் வகுப்பிலிருந்து மூன்று மொழிகள் கட்டாயம் என்றும், மூன்று மொழிகளில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் அறிவித்தபோது, இந்தியாவின் பலதரப்பட்ட இலக்கிய மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை, சிறுவயதிலேயே குழந்தைகள் அறிந்துகொள்ள உதவும் என்பதால், அந்த முடிவை வரவேற்றவர்களில் நானும் ஒருவன். 2026 ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பில், 9ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கட்டாயமாக்குவது, இன்றிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்தப்படும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், கடந்த வாரம், மே 15, 2026 அன்று, சிபிஎஸ்இ அனைத்து இணைப்பு பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள புதிய சுற்றறிக்கையில், இந்த கல்வியாண்டிலிருந்தே 9ம் வகுப்பு மாணவர்களுக்கு 3வது மொழியை கட்டாயமாக்கியுள்ளது. இதன் மூலம், 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்தப்படும் என்ற தனது முந்தைய அறிவிப்பை, சிபிஎஸ்இ அமைப்பு மீறியிருக்கிறது. சிபிஎஸ்இ அமைப்பின் இந்த திடீர் அறிவிப்பு, பெற்றோர்களுக்கு, குறிப்பாக தமிழக மாணவர்களின் பெற்றோர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏனெனில், அவர்களின் குழந்தைகள் ஏற்கனவே ஆறாம் வகுப்பிலேயே தாங்கள் விரும்பிய மொழியைத் தேர்வு செய்துள்ள நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மூன்று மொழிகளை கட்டாயமாகக் கற்க வேண்டும் என்றும், அதில் இரு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும், அது இந்த கல்வியாண்டு 2026 ஜூலை 1 முதலே அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மிகவும் குறுகிய காலத்திற்குள் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மற்றுமொரு புதிய மொழியைக் கற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, குழந்தைகளுக்கு தேவையற்ற மனஅழுத்தத்தை ஏற்படுத்தி, அவர்களின் மொத்த கல்வித் திறனையும் பாதிக்கும். எனவே, இந்த புதிய அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சகம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், ஒன்பதாம் வகுப்பில் மூன்று மொழிகள், அதில் இரண்டு இந்திய மொழிகள் கட்டாயமாக்கப்படும் திட்டத்தை, முன்பே அறிவித்தபடி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக பாஜ தலைவராக அண்ணாமலை இருந்த போது ஒன்றிய அரசு கொண்டு வரும் அனைத்து திட்டத்தையும் ஆதரித்து பேசினார். யாராவது ஒன்றிய அரசுக்கு எதிராக பேசினால் கடுமையாக விமர்சித்தும் வந்தார். தற்போது அண்ணாமலை பாஜ தலைவராக இருந்தாலும் அப்போதும் கூட ஒன்றிய அரசுக்கு ஆதரவாக பேசி வந்தார். இந்த நிலையில் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு மும்மொழி கல்வியை கட்டாயமாக்கப்படும் என்ற ஒன்றிய அரசின் அறிவிப்புக்கு எதிராக முதல் முறையாக அண்ணாமலை குரல் எழுப்பியுள்ளார்.

மிகவும் குறுகிய காலத்திற்குள் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மற்றுமொரு புதிய மொழியைக் கற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, குழந்தைகளுக்கு தேவையற்ற மனஅழுத்தத்தை ஏற்படுத்தி, அவர்களின் மொத்த கல்வித் திறனையும் பாதிக்கும் என்றும் அவர் விமர்சித்துள்ளார். அண்ணாமலையின் இந்த திடீர் எதிர்ப்பால் பாஜவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: