சென்னை: தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நேற்று கூடுதல் டிஜிபி அருண் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு ஊழியர்கள் பூங்கொடுத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் நிலுவையில் உள்ள லஞ்ச வழக்குகள் குறித்து முழுமையான அறிக்கை அளிக்க மாவட்ட வாரியாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்ட கூடுதல் டிஜிபி அருண் நேற்று காலை பதவியேற்றுக்கொண்டார். முன்னதாக ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்திற்கு கூடுதல் டிஜிபி அருண் வந்தார். அப்போது அலுவலகத்தில் பணியாற்றிய உயர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பூங்கொத்து கொடுத்து கூடுதல் டிஜிபி அருணை வரவேற்றனர்.
பின்னர் இயக்குநர் அலுவலகத்தில், பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள லஞ்ச வழக்குகளின் தற்போதைய நிலை என்ன? 10 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள வழக்குகளின் விவரங்கள் குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதுதவிர தமிழகம் முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகளின் முழுமையான விவரங்களை ஓரிரு நாளில் அறிக்கையாக அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
இதேபோன்று, தமிழ்நாடு சட்டம் -ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக அன்பு நேற்று காலை தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் பதவியேற்றுக்கொண்டார். அப்போது அவர், ரவுடிகளை கட்டுப்படுத்தவும், குற்றங்களை குறைக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்று 4 மண்டல ஐஜிக்கள், டிஐஜிக்கள், மாநகர கமிஷனர்கள் மற்றும் மாவட்ட எஸ்பிக்களிடம் காணொலி காட்சி வழியாக ஆலோசனை நடத்தினார். மேலும், மண்டல வாரியாக ரவுடிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து முழுமையான அறிக்கை இந்த வார இறுதிக்குள் அளிக்க வேண்டும் என்று கூடுதல் டிஜிபி அன்பு உத்தரவிட்டுள்ளார்.
