சென்னை: மின்சாரத்துறை பற்றிய போதுமான புரிதல் இல்லாத அமைச்சரின் கீழ் இயங்கும் மின்வாரியம் இவ்வளவு மோசமாக முன்னெப்போதும் இருந்ததில்லை என மின்துறை அமைச்சர் நிர்மல் குமாரின் குற்றச்சாட்டிற்கு தமிழ்நாடு மின்கழக தொ.மு.ச. பொதுச்செயலாளர் மணிமாறன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் தேவைக்கேற்ப துணைமின்நிலையங்களை அதிகப்படுத்தியும், மின்விநியோக கட்டமைப்பை கூடுதலாக நிறுவியும் மற்றும் பலப்படுத்தியும், ஆங்காங்கே புதிய மின்மாற்றிகளை அமைத்தும் மின்சாரத்தை கொண்டு செல்வதற்கு ஏதுவாக பிஜி மற்றும் லிஜி லைன்களை புதியதாக நிறுவியும் மின்நுகர்வோருக்கு எவ்விதமாக இடர்பாடுகளும் ஏற்படாதாவாறு மிகச்சிறந்த நிர்வாகத் திறமையுடன் கையாளப்பட்டதே, கடந்த திமுக ஆட்சியில் தடையில்லா மின்சாரம் வழங்கிட காரணமாகும்.
பொதுமக்களின் புகார்களை 2021ல் மின்னகம் என்ற பிரிவை ஏற்படுத்தி, அதன் மூலம் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்து எவ்வித காலதாமதம் இன்றி பொதுமக்கள் பயன்படும் வகையில் புதிய மின்இணைப்பு, பெயர்மாற்றம் உள்ளிட்ட மற்ற சேவைகளும் சிறப்பாக தி.மு.க ஆட்சியில் வழங்கப்பட்டதை ஏதோ இந்த அரசு வந்த பிறகுதான் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டது போல ஒரு அமைச்சர் பேசுவது வடிகட்டிய பொய்யாகும்.
தமிழ்நாட்டின் உச்சபட்ச மின்தேவை கடந்த 29.4.2026 அன்று 21,307 மெகாவாட் அதே நாளில் உச்சபட்ச மின்நுகர்வு 471.456 மில்லியன் யூனிட் ஆகும். கடந்த 4 நாட்களாக தமிழகத்தில் வெயிலின் தாக்கம் 108 டிகிரி வரை இருந்தது. அதன் காரணமாக மின்சாரம் நுகர்வு உயர்ந்துள்ளது. ஆகையால் மின்விநியோகத்தில் கடும் இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளது. அதனால் தற்சமயம் கடந்த ஒரு வாரமாக மின்நுகர்வோரின் தேவையை சமாளிக்க முடியாமல் கடும் மின்வெட்டு ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வீதிக்கு வந்து இந்த அரசுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
கோடையில் தேவைப்படும் கூடுதல் மின்சாரத்தை எங்கிருந்து எப்படி பெறப்போகிறோம் என முன் கூட்டியே மின்வாரிய அதிகாரிகளுடனும், தொழிற்சங்கங்களுடனும் விவாதித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய மின்சாரத்துறை அமைச்சர் கடந்த கால தி.மு.க ஆட்சியின் மீது பழிபோட்டு தப்பிக்க முயற்சிக்கிறார். மேலும் கூடுதல் மின்தேவைக்காக எவ்வித முன்நடவடிக்கை எடுக்காமல் மின்சாரத் துறை பற்றிய போதுமான புரிதல் பெறாத அமைச்சரின் கீழ் இயங்கும் மின்வாரியம் இவ்வளவு மோசமாக முன்னெப்போதும் இருந்ததில்லை.
‘வரும் பொருள் உரைத்தல் மந்திரிக்கு அழகு’ என்பது தமிழ் பழமொழி! வந்த பின்பும் பொருள் உரைக்க முடியாமல் திணறுவது மந்திரியாய் இருக்கவே தகுதியில்லை என்பதை காட்டுகிறது இந்த மின்வெட்டு! எனவே தி.மு.க ஆட்சியின் மீது பழிபோடுவதை நிறுத்திவிட்டு இனிமேலாவது துறைரீதியாக அதிகாரிகளுடனும், தொழிற்சங்கங்களுடனும் ஆய்வுக் கூட்டம் நடத்தி, விவாதித்து மின் தட்டுப்பாட்டை நீக்கி மக்களை காப்பாற்ற இந்த அரசு முன்வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
