நெல்லை, மே 26:நெல்லை மாவட்டத்தில் 107 குழந்தைகள் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு உதவி தேவைப்படும் குழந்தைகள் 1098 என்ற எண்ணில் அழைக்கலாம் என கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் சுகுமார் தலைமையில் குழந்தைகள் நலக்குழுவின் ஆய்வுக்கூட்டம் நடந்தது. ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குழந்தைகள் நலக்குழுவின் செயல்பாடுகள் மற்றும் கடந்த ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நலன் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் நிலை, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் குறித்து கலெக்டர் சுகுமார் விரிவாக ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார். கூட்டத்தில், 4வது காலாண்டு ஆய்வுக் காலப்பகுதியில் மொத்தம் 107 குழந்தைகள் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதில் குழந்தைத் திருமணத் தடுப்பு, போதைப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மீட்டு பாதுகாப்பு வழங்குதல், பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகளின் மறுவாழ்வு, பள்ளிப் படிப்பை இடைநிறுத்திய குழந்தைகளை மீண்டும் கல்வியில் இணைத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
மேலும், பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் தன்மை, தீர்வு காணப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை, நிலுவையில் உள்ள வழக்குகளின் தற்போதைய நிலை மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட நல உதவிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார். குழந்தைகளின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதையும், அவர்களின் கல்வி, ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சம்பந்தப்பட்ட துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார். பாதுகாப்பு மற்றும் கவனிப்பு தேவைப்படும் குழந்தைகள் குழந்தை உதவி எண்.1098 என்ற எண்ணை தொடர்புக் கொள்ளலாம்.
கல்வி உதவி தேவைப்படுவர்கள் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மாநில அரசின் அன்புக் கரங்கள் திட்டத்தில் சேர்ந்து தேவையான குழந்தைகள் பயன்பெறலாம் என கலெக்டர் சுகுமார் தெரிவித்தார். கூட்டத்தில் குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள் பிரிச்சிட் சீலஸ், முத்துராமலிங்கம், முகமதி, மனோகர், சுவாமிநாதன் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
