தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மகா சிவாரத்திரி விழா ஏற்பாடு தீவிரம்

தேவதானப்பட்டி, மார்ச் 4: தேவதானப்பட்டியில் இருந்து 3 கிமீ தொலைவில் மஞ்சளாற்றின் நதிக்கரையில் அமைந்துள்ளது மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில். காஞ்சி காமாட்சியம்மனுக்கு அடுத்தபடியாக புகழ்பெற்ற இக்கோயிலில் அம்மனுக்கு விக்ரகம் கிடையாது. அடைக்கப்பட்ட குச்சு வீட்டின் கதவிற்கு 3 கால பூஜைகள் நடத்தப்படுகிறது. மேலும் சாயரட்சை பூஜையில் சயன உத்தரவு கேட்பது இக்கோயிலின் சிறப்பம்சமாகும். தீபாராதனைக்கு முன் தேங்காய் உடைக்கப்படுவதில்லை. வாழைப்பழம் உரிக்கப்படுவதில்லை. குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் இந்த அம்மனை குலதெய்வமாக வழிபடலாம்.

மேலும் திருமணம் தடைபடும் பெண்கள் இக்கோயிலில் பூ முடித்து பார்த்து உத்தரவு பெற்றால் உடனே திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை. இங்கு ஆண்டுதோறும் மாசி மகா சிவாரத்திரி வெகு விமரிசையாக நடக்கும். இதில் தமிழகம் முழுவதும் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். இந்த ஆண்டு மகா சிவாரத்திரி திருவிழா மார்ச் 11ம் தேதி துவங்கி மார்ச் 18 வரை நடைபெறவுள்ளது. இதற்காக விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனை கோயில் செயல்அலுவலர் சந்திரசேகரன் தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: