மீண்டும் தேர்வால் மன அழுத்தம்: கர்நாடகாவில் நீட் தேர்வு எழுதிய மாணவி தற்கொலை

 

பெங்களூரு: நீட் தேர்வை மீண்டும் எழுதுவது குறித்த மன அழுத்தத்தில் இருந்த கலபுர்கியைச் சேர்ந்த பாக்யஸ்ரீ என்ற மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே 3ம் தேதி நடந்தது. ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாத்தாள் முன்பே கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மே 3ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஜூன் 21ம் தேதி மீண்டும் நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் ஏற்கனவே கடினமாக படித்து தேர்வெழுதிய லட்சக்கணக்கான மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வேண்டி இருப்பதால் கடும் மன உளைச்சலிலும், மன அழுத்தத்திலும் உள்ளனர். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நீட் தேர்வை மீண்டும் நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. இந்நிலையில், கர்நாடக மாநிலம் கலபுர்கியில் மீண்டும் தேர்வு எழுத வேண்டிய அழுத்தத்தில் 18 வயது பாக்யஸ்ரீ என்ற மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மாணவியின் தந்தை ராஜசேகர் கூறுகையில், ‘என் மகள் பாக்யஸ்ரீ நீட் தேர்வை மிகச்சிறப்பாக எழுதியிருந்தார். அனைத்தும் நன்றாகத்தான் சென்றுகொண்டிருந்தது. இந்நிலையில், நீட் தேர்வை மீண்டும் எழுதுவது குறித்து மிகவும் வருத்தப்பட்டார் என்று அவர் வருத்தத்துடன் பேசினார். பாக்யஸ்ரீ தற்கொலை செய்துகொள்ளும் முன் எந்த கடிதமும் எழுதி வைக்கவில்லை. இதுதொடர்பாக ஸ்டேஷன் பஜார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: