நீட் வினாத்தாள் கசிவு வழக்கு: ஆயுர்வேத மருத்துவ மாணவரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

 

புதுடெல்லி: கடந்த 3ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வின் வினாத்தாள், தேர்வு நடப்பதற்கு முன்பே ராஜஸ்தானில் கசிந்தது. இந்த வினாத்தாள் கசிவு புகாரைத் தொடர்ந்து தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஜூன் 21-ம் தேதி மறுதேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த மோசடி குறித்து சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கை சேர்ந்த சுபம் கைர்னார்(30) என்ற ஆயுர்வேத மருத்துவ மாணவரை கடந்த 13ம் தேதி சிபிஐ கைது செய்தது. இவர் புனேயில் உள்ள தனது கூட்டாளியிடமிருந்து ரூ.10 லட்சத்திற்கு மாதிரி வினாத்தாளை பெற்று அரியானா, குருகிராமை சேர்ந்த ஒருவருக்கு அதனை ரூ.15 லட்சத்துக்கு விற்றுள்ளார்.

டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ருச்சி அகர்வால் முன்னிலையில், சுபம் கைர்னார் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். இதில் உள்ள சதித்திட்டத்தையும், கசிந்த வினாத்தாளின் மூலத்தையும் வெளிக்கொணர வேண்டும் என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்களை மகாராஷ்டிராவின் நாசிக் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் சிபிஐ தெரிவித்திருந்தது.
இதையடுத்து நீதிமன்றம், சுபம் கைர்னாரின் சிபிஐ காவலை வரும் ஜூன் 6ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.

Related Stories: