சுற்றுலா பயணிகளை கவரும் அம்சங்களுடன் ஏற்காட்டில் 49வது கோடை விழா மலர் கண்காட்சி இன்று தொடக்கம்: சிறப்பு பஸ்கள் இயக்கம்

 

சேலம், மே 22: ஏற்காட்டில் 49வது கோடை விழா மலர் கண்காட்சி, இன்று தொடங்கவுள்ளதை முன்னிட்டு, சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சேலம் மாவட்டத்தின் முதன்மை சுற்றுலா தலமான ஏற்காடு, மலைகளின் அரசன் என அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் இங்கு மே மாதத்தில் நடத்தப்படும் கோடை விழா மற்றும் மலர்கண்காட்சியை காண பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு வந்து செல்கின்றனர். நடப்பாண்டு 49வது கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சி இன்று (22ம் தேதி) தொடங்கி வரும் 28ம் தேதி வரை 7 நாட்களுக்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடக்க விழாவில், கலெக்டர் இளம் பகவத் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைக்கிறார்.

கோடை விழாவை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்கும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, தோட்டக்கலைத்துறையின் சார்பில், அண்ணா பூங்காவில் 2 லட்சம் மலர்களை கொண்டு மலர்க்காட்சி, பழக்கண்காட்சி மற்றும் காய்கறி கண்காட்சிகள் அமைக்கப்படுகிறது. காளை மாடு, கன்றுக்குட்டியுடன் கறவை பசு, முயல், வாத்து, ஆடு, நாய், கோழி, சேவல் உள்ளிட்ட வடிவமைப்புகள், டெடி பியர், தேவதை, பரதநாட்டிய மங்கைகள், இரட்டை இதயம், மான் உருவம், பிறை நிலா, சிறகுகொண்ட இதயம் உள்ளிட்ட உள்ளிட்ட பல்வேறு வடிவமைப்புகள், பல வண்ண மலர்களை கொண்டு அமைக்கப்படுகிறது.

அதே போல், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வண்ணமலர் தொட்டிகள் காட்சிப்படுத்தப்படுகிறது. மேலும், தாவரவியல் பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், சேர்வராயன் மலை, படகு இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கான பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஏற்காடு மலைப்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, விபத்துகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, கனரக மற்றும் 4 சக்கர வாகனங்கள், ஏற்காடு செல்லும்போது கோரிமேடு-அடிவாரம் வழியாகவும், கீழே இறங்கும் போது கொட்டச்சேடு-குப்பனூர் சாலை வழியாகவும் செல்ல ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

கோடை விழாவை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

ஏற்காட்டிற்கு 32 சிறப்பு பஸ்கள் இயக்கம்
ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை முன்னிட்டு, பொதுமக்களின் வசதிக்காக தினசரி சேலத்திலிருந்து ஏற்காட்டிற்கு இயக்கப்படும் 12 பேருந்துகளுடன், கூடுதலாக 32 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. மேலும், ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான ஏற்காடு ஏரி, பகோடா பாயிண்ட், சேர்வராயன் கோயில், லேடீஸ் சீட் ஆகியவற்றை இணைக்கும் வகையில் இரண்டு உள்வட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

 

Related Stories: