சேலம், மே 22: கோடை வெயிலை தாக்கு பிடிக்க முடியாமல், சாலையோர ஆதரவற்ற முதியவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் ஆதரவற்று தனித்து விடப்படும் முதியோர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. நவீன வாழ்க்கை முறையால் உறவுகளால், கைவிடப்பட்டு வீதிக்கு வரும் முதியோர்கள் பலரும், பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம், சாலையோர நடைபாதைகளில் தங்களது எஞ்சிய வாழ்க்கையை கடத்துகின்றனர். உணவு, பராமரிப்பு இல்லாமல், நோய் வாய்ப்பட்டு பலர் இறப்பையும் சந்திக்கிறார்கள்.
மனநிலை பாதிக்கப்படும் முதியோர்களின் நிலைமையும் இதுபோன்று தான் இருக்கிறது. சேலத்தில் கோட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்புறமும், கலெக்டர் அலுவலகம் வளாகம் அருகில், பழைய பஸ் ஸ்டாண்ட், புதிய பஸ் ஸ்டாண்ட், 5 ரோடு, சேலம் அரசு மருத்துவமனை வெளிபுறம், கோயில் பகுதிகள், பெரியார் மேம்பாலம், ஈரடுக்கு மேம்பாலம், ஏவிஆர் ரவுண்டானா, கந்தம்பட்டி மேம்பாலம் உள்பட பல பகுதிகளில் ஆதரவற்ற முதியோர்கள் அதிகளவில் உள்ளனர். இவர்கள் பொதுமக்களிடம் யாசகம் பெற்று வாழ்கின்றனர். மேலும், சிலர் அவர்கள் தங்கும் இடத்திலேயே உணவு வந்து கொடுக்கின்றனர். இந்த நிலையில், கடந்த இரு மாதமாக சேலத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
சேலத்தில் கடந்த சில நாட்களாக 100 முதல் 103 டிகிரி வெப்பநிலை பதிவாகி வருகிறது. வெயில் தாக்கம் காரணமாக வீடுகளில் கடும் புழுக்கம் ஏற்படுகிறது. அதேபோல் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற முதியவர்கள் வெயில் காரணமாக கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வெயிலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ஆதரவற்ற முதியவர்கள் உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது. கடந்த வாரம் வாரம், ஆதரவற்ற முதியவர்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேபோல் நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் சாலையோர ஆதரவற்றவர்கள் உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளது. சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற முதியவர்களை தொண்டு நிறுவனம், தன்னார்வ நிறுவனங்கள் மீட்டு, அரசு காப்பகங்களில் ஒப்படைக்க வேண்டும். அவர்களை பராமரிக்க முன்வர வேண்டும். யாராவது நோய்வாய்பட்டு இருந்தால், அவர்களை மீட்டு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
