புதுடெல்லி: நார்வேவுக்கு பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக சென்றபோது, அந்நாட்டு பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோரை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து இருவரும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது நார்வே பெண் பத்திரிகையாளர் ஹெல் லிங் என்பவர், ‘பிரதமர் மோடி நிருபர்களின் கேள்விகளுக்கு ஏன் பதில் அளிப்பதில்லை? இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம், மனித உரிமைகளின் நிலை என்ன?’ என கேள்வி எழுப்பினார். இதற்கு இரு நாட்டு தலைவர்களும் எந்த பதிலும் அளிக்காமல் கடந்து சென்றனர்.
இந்நிலையில், அந்த பெண் பத்திரிகையாளர் இந்த விவாதத்தை வீடியோவாக பதிவு செய்து தன் சமூகவலைதளத்தில் பதிவிட்டார். இது இணையத்தில் வேகமாக பரவி விவாத பொருளானது.
இந்த சூழலில், அதற்கு வலுசேர்க்கும் விதமாக பிரதமர் மோடியை பாம்பாட்டி போல சித்தரித்து நார்வே நாட்டின், ஆப்டன்போஸ்டன் என்ற நாளிதழ் கார்ட்டூன் வெளியிட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த கார்ட்டூன அப்பட்டமான இனவெறி மற்றும் பிற்போக்குத்தனமானது’ என, சமூக வலைதளங்களில் சாடி வருகின்றனர்.
இந்தியா என்றாலே பாம்பாட்டிகளின் தேசம் என்ற பழைய காலனித்துவ சிந்தனையில் இருந்து ஐரோப்பிய ஊடகங்கள் எப்போது விடுபடும் என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவரை, இவ்வளவு தரம் தாழ்ந்த முறையில் சித்தரிப்பது உலகத்தரம் வாய்ந்த ஒரு நாளிதழுக்கு அழகல்ல என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. இதுகுறித்து நார்வே தூதரகம் அல்லது சம்பந்தப்பட்ட நாளிதழ் தரப்பில் இருந்து ஏதேனும் அதிகாரப்பூர்வ விளக்கமோ எதுவும் இதுவரையில் அளிக்கப்படவில்லை.
