காத்மாண்டு: உலகின் மிக உயரமான எவரெஸ்ட் மலை சிகரத்தில் ஏறி சாதனை படைத்த 2 இந்திய வீரர்கள் கடும் சோர்வு காரணமாக பரிதாபமாக உயிரிழந்தனர். கடந்த 20ம் தேதி 274 மலையேற்ற வீரர்கள் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் மலை சிகரத்தில் ஏறி சாதனை படைத்தனர். தற்போதைய சீசனில் எவரெஸ்ட் சிகரத்தை ஏற 502 வீரர்களுக்கு நேபாள அரசு அனுமதி வழங்கியது. அதில், 3 இந்தியர்கள் உட்பட 274 பேர் ஒரே நாளில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி உலக சாதனை படைத்தனர்.
இந்த நிலையில், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த இரண்டு வீரர்களான அருண் குமார் திவாரி மற்றும் சந்தீப் ஆரே ஆகியோர் நேற்று உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் சிகரத்தில் இருந்து இறங்கும் போது கடும் சோர்வு காரணமாக இறந்தனர். அவர்களுடைய உயிரை காப்பாற்றுவதற்கு வழிகாட்டிகள் மிகுந்த முயற்சி எடுத்தனர். எனினும் அவர்களை காப்பாற்ற முடியவில்லை என்று நேபாள மலையேற்ற வீரர்கள் சங்கத்தின் பொது செயலாளர் ரிஷி பண்டாரி நேற்று தெரிவித்தார். சந்தீப் ஆரே கடந்த 20ம் தேதி எவரெஸ்டில் ஏறினார். அதற்கு அடுத்த நாள் அருண் குமார் திவாரி சிகரத்தில் ஏறினார்.
