×

அமெரிக்காவின் முக்கிய கோரிக்கையான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தர ஈரான் உச்ச தலைவர் மறுப்பு: ராணுவ தளம் சீரமைப்பு, டிரோன் உற்பத்தி தீவிரம்

 

டெஹ்ரான்: செறிவூட்டப்பட்ட யுரேனியம் தொடர்ந்து ஈரானிலேயே இருக்க வேண்டுமென அந்நாட்டின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் அமைதி பேச்சுவார்த்தையில் அமெரிக்கா முன்வைத்த முக்கிய கோரிக்கை மறுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, அமைதி ஒப்பந்தத்திற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த அமைதி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா தனது தரப்பு பரிந்துரைகளை ஈரானுக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த பரிந்துரைகளை ஏற்பது குறித்து ஈரான் பரிசீலித்து வருவதாக கூறி உள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தர ஈரான் மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஈரானின் பார்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், ‘400 கிலோ அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் ஒப்படைக்க வேண்டும், இதற்கான செயல்பாடுகளை ஒரே ஒரு அணுசக்தி மையத்திற்குள் மட்டுப்படுத்த வேண்டும், போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு அமெரிக்கா எந்த இழப்பீடும் வழங்காது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா கோரியிருக்கிறது’ என கூறப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக ஈரானின் உயர்மட்ட அதிகாரிகள் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த தகவலில், ‘‘செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஈரானை விட்டு வெளியேறக் கூடாது என்பதே உச்ச தலைவர் கமேனியின் உத்தரவும், அதிகார மையத்திற்குள் நிலவும் ஒருமித்த கருத்தும் ஆகும்’’ என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவின் முக்கிய கோரிக்கையை ஈரான் நிராகரித்துள்ளது. இதற்கிடையே, ஈரானின் ராணுவ தளங்கள் விரைவாக மறுசீரமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், டிரோன்களின் உற்பத்தியும் வேகப்படுத்தப்பட்டிருப்பதாக அமெரிக்க உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மேற்கு ஆசியாவில் மீண்டும் பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

பாக். உள்துறை அமைச்சர் மீண்டும் ஈரான் பயணம்
போர் பதற்றத்திற்கு மத்தியில், பாகிஸ்தான் தனது மத்தியஸ்த முயற்சிகளை தீவிரப்படுத்தி உள்ளது. இதற்காக, பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, ஒருவாரத்திற்கும் குறைவான காலத்தில் 2வது முறையாக ஈரான் சென்றுள்ளார். அங்கு அவர் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் அதிபர் மசூத் பெசேஷ்கியன் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். பாகிஸ்தானின் ராணுவ தலைமை தளபதியான பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீரும் ஈரானுக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

Tags : Iran ,Supreme Leader ,US ,Tehran ,Mojtaba Khamenei ,
× RELATED எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை: 2 இந்திய வீரர்கள் பலி