வாஷிங்டன்: மெட்டா, அமேசான் போன்ற நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், 60 நாளில் வேறு வேலையில் சேராவிட்டால் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டிய இக்கட்டான நிலைக்கு எச்-1பி விசாதாரர்கள் தள்ளப்பட்டுள்ளனர். பல ஆண்டுகளாக இந்திய பொறியாளர்களும், சாப்ட்வேர் டெவலப்பர்களும் அமெரிக்காவில் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களை உருவாக்க உதவினர். நல்ல சம்பளம், வசதியான வாழ்க்கை காரணமாக அமெரிக்காவிலேயே நிரந்தரமாக குடியேற பலரும் முயல்கின்றனர். அந்த கனவில் அங்கேயே வீடு வாங்கினர். குடும்பத்துடன் குடிபெயர்ந்தனர். அமெரிக்காவிலேயே பலரும் குழந்தையையும் பெற்றுள்ளனர்.
இப்படிப்பட்ட நிலையில், நிரந்தர குடியுரிமை பெறாதவர்கள் வேலையை இழக்கும் போது, வெறுமனே அவர்களது வேலை மட்டும் பறிபோவதில்லை, அமெரிக்காவிலிருந்தே வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கும் அவர்கள் தள்ளப்படுகின்றனர். எச்-1பி விசா மூலமே அமெரிக்காவில் தங்கி பணியாற்ற முடியும். எச்-1பி விசா விதிமுறைகளின்படி, விசாதாரர் வேலை இழந்தால் அடுத்த 60 நாட்களுக்குள் வேறு வேலையில் சேர்ந்து விட வேண்டும். இல்லாவிட்டால், அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும்.
தற்போதைய சூழலில் 60 நாட்களில் அடுத்த வேலை என்பது குதிரைக் கொம்பாக மாறிவிட்டது. இல்லாவிட்டால் சுற்றுலா விசாவாக மாற்றி மேலும் சில காலம் வேலை தேட முடியும். எனவே, அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களின் ஆட்குறைப்பு நடவடிக்கை, எச்-1பி விசா மூலம் பணியாற்றும் இந்திய ஐடி தொழிலாளர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆண்டில் மட்டும் சிலிக்கான் வேலியில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஐடி ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
