×

ஜப்பானில் தீ விபத்து: பழமையான கோயில் நாசம்

ஹிரோஷிமா: ஜப்பானின் ஹிரோஷிமா மாகாணத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ‘தைஷோயின்’ என்ற பௌத்த கோயிலின் ஒரு பகுதி நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் முற்றிலும் எரிந்து சாம்பலாகியது.

இந்த தீ விபத்துக்கு கோயிலில் கடந்த 1200 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து எரிந்து வந்த அணையாத புனித ஜோதியே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கோபோ டைஷி (குக்காய் என்றும் அழைக்கப்படுபவர்) தனது ஆன்மீகப் பயிற்சிகளின் போது இந்த தீயை மூட்டியதாக கூறப்படுகிறது. அன்றிலிருந்து சுமார் 1,200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் தீ அணையாமல் தொடர்ந்து எரிந்து வருவதாக நம்பப்படுகிறது. மேலும், ஹிரோஷிமா அமைதி நினைவுப் பூங்காவில் உள்ள அமைதிச் சுடருக்கான மூலச் சுடர்களில் ஒன்றாக, இந்தத் தெய்வீகச் சுடரும் விளங்கியதாக கூறப்படுகிறது.

ரெய்காடோ மண்டபம் பலமுறை தீ விபத்துகளால் சேதமடைந்துள்ளது. 2005-ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் இம்மண்டபம் முழுமையாக அழிந்தது. பின்னர், 2006-ல் பாரம்பரிய கட்டிடக்கலை முறைகளைப் பயன்படுத்தி இது மீண்டும் கட்டப்பட்டது.

இந்நிலையில் சமீபத்திய தீ விபத்தின்போது காட்டுக்குள் தீ பரவுவதைத் தடுக்க வான்வழியாகத் தீயணைப்பு ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டாலும், ரெய்காடோ மண்டபம் முழுமையாக அழிந்துபோனதுடன் தீ சுற்றியுள்ள வனப்பகுதிகளுக்கும் பரவியது. பின்னர் தீயணைப்பு வீரர்கள் பலமணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

Tags : Japan ,Hiroshima ,Taishoin' ,Buddhist ,Hiroshima Prefecture, Japan ,
× RELATED எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை: 2 இந்திய வீரர்கள் பலி