விழுப்புரம்: விழுப்புரத்தில் உள்ள அம்மா உணவகத்தை ஆய்வு செய்த தவெக நிர்வாகி, அரசு பணியாளர்களுக்கு உத்தரவுகளை போட்டு அலப்பறை செய்துள்ளார்.
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைத்துள்ள நிலையில் அக்கட்சி எம்எல்ஏக்கள் அதிகாரிகளை வீட்டிற்கு அழைத்து மீட்டிங் போடுவது, அரசு அலுவலகங்களில் ஆய்வு என்ற பெயரிலும் தனது உத்தரவை செயல்படுத்தாத அதிகாரிகளை மிரட்டுவது ஆகிய சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. அதாவது, எம்எல்ஏக்கள்தான் அலப்cபறையில் ஈடுபடுகிறார்கள் என்றால் தற்போது ஒருபடி மேலே போய் தவெக நிர்வாகிகளும் தங்களுக்கும் அதிகாரம் இருப்பதுபோல் காட்டிக்கொண்டு ஆங்காங்கே ஆய்வு எனும் பெயரில் அரசு அலுவலகங்களுக்கு சென்று அதிகாரிகளை மிரட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், விழுப்புரம் தவெக மாவட்ட செயலாளரான குஷிமோகன் நேற்று தனது நிர்வாகிகளுடன் அங்குள்ள அம்மா உணவகத்திற்கு திடீரென சென்றுள்ளார். பின்னர் அங்குள்ள சமையல் அறை, கைகழுவும் இடம், உணவு தயாரிக்கும் பகுதிகளை பார்வையிட்ட அவர், அதுசரியில்லை… இது சரியில்லை.. எனக் கூறி அங்கு பணியில் இருந்த ஊழியர்களுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அத்தோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் போனில் தொடர்புகொண்டு அரசின் உத்தரவுபடி செயல்பட வேண்டும். இல்லாவிடில் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம் என்று மிரட்டியிருக்கிறார். இது அரசு ஊழியர்களிடம் மட்டுமின்றி மக்களிடமும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
