சென்னை: தமிழகத்தின் சில பகுதிகளில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீச கூடும் என்று வானிலை மையம் எச்சரித்து உள்ளது. அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் உச்சம் பெற்றிருக்க கூடிய சூழலில் தலைநகர் சென்னையில் சுமார் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுதுள்ளது. நேற்றைய தினம் மீனம்பாக்கம் விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் 107 டிகிரி அளவிற்கு வியில் பதிவாகி இருந்தது.
கடல் காற்றும் தரையை நோக்கி தாமதமாக வந்ததே சென்னையில் வெயில் அதிகரிக்க காரணம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் தெரிவித்திருக்கும் வானிலை ஆய்வு மையம், கடல் காற்று தரைக்கு வரும் நேரம் காலதாமதமாக இருப்பதால் தமிழ்நாட்டில் அதிகபத வெப்பநிலை இயல்பான அளவை விட சுமார் 3 முதல் 4 டிகிரி செல்ஸியஸ் அதிகரிக்க கூடும் என்று கூறி உள்ளது. இன்றும், நாளையும் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் என ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக் கூடும் எனவும் எச்சரித்து உள்ளது. பொதுவாக கத்திரி வெயில் காலத்தில் 104 டிகிரி அல்லது 105 டிகிரி வரை வெப்பம் பதிவாகும். ஆனால் தற்போது இந்த அளவு 107 டிகிரி, 108 டிகிரி என்று அதிகரித்து கொண்டே செல்வது மக்களுக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தம் என்கிறார்கள் நிபுணர்கள்.
அதே நேரம் தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.இது தொடர்பான அறிக்கையில் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, ஈரோடு மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது.
