வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலில் தனக்கு 99% மக்கள் ஆதரவு இருப்பதாக கூறி, தான் அந்நாட்டின் பிரதமர் பதவிக்குப் போட்டியிட கூடும் என்று நகைச்சுவையாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் அமரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இஸ்ரேலில் எனக்கு இப்போது 99% ஆதரவு உள்ளது. இன்று காலை எனக்குக் கிடைத்த ஒரு கருத்துக்கணிப்பு முடிவின்படி, இஸ்ரேலில் எனக்கு 99% ஆதரவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே ஒருவேளை எதிர்காலத்தில் அந்நாட்டில் நான் பிரதமராக போட்டியிடலாம்! இதற்காக, அமெரிக்க அதிபர் பதவிக்காலம் முடிந்த பிறகு நான் இஸ்ரேலுக்கு செல்ல கூடும்,” என்று சிரித்தபடி நகைச்சுவையாக தெரிவித்தார்.
மேற்கு ஆசியாவில் நிலவும் தொடர் பதற்றங்கள் மற்றும் இஸ்ரேலுக்குள் நிலவும் அரசியல் நிச்சயமற்ற சூழலுக்கு மத்தியில், அதிபரின் இந்தக் கருத்துகள் இணையவாசிகள் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனிடையே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான உறவு குறித்துப் பேசுகையில், “நான் என்ன சொல்கிறேனோ, அதை அவர் செய்வார்”. அவர் மிகவும் நல்ல மனிதர். என் கருத்துப்படி, இஸ்ரேலில் அவர் உரிய முறையில் நடத்தப்படுவதில்லை” என்று டிரம்ப் கூறினார்.
முன்னதாக தனது முந்தைய அதிபர் பதவிக் காலத்தில், ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பது, அமெரிக்கத் தூதரகத்தை அந்நகருக்கு மாற்றுவது, மற்றும் ஆபிரகாம் உடன்படிக்கைகளுக்கு ஆதரவளிப்பது உள்ளிட்ட பல முக்கிய இஸ்ரேல் சார்பு நடவடிக்கைகளை ட்ரம்ப் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
