திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் மயிலம் பகுதியில் உள்ள ரயில்வே இருப்புப் பாதைகளை சரி செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்காக அனைத்து உபகரணங்களுடன் கூடிய இருப்பு பாதையை சரி செய்யும் ரயில் இன்ஜின் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று வழக்கம் போல் இந்த ரயில் இன்ஜின் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் ரயில் நிலையம் அருகே ஓடுபாதையை சரி செய்யும் பணி நடந்தபோது, எதிர்பாராத விதமாக ரயில் என்ஜின் தடம் புரண்டு நின்றது.
இதனால் புதுவையில் இருந்து புதுடெல்லியை நோக்கி வழக்கமாகச் செல்லும் புவனேஸ்வர் அதிவிரைவு ரயில் மற்றும் மதுரை-சென்னை தேஜஸ் ரயில் உள்ளிட்டவை விழுப்புரம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. புது டெல்லிக்கு வழக்கமாக திண்டிவனம் ரயில் நிலையம் வழியாக செல்லும் புவனேஸ்வர் ரயில் மற்றும் மதுரை தேஜஸ் ரயில்கள் 3ல் இருந்து 4 மணிநேரம் வரை கால தாமதமாக செல்லும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில் பாதுகாப்பு துறை போலீசார் மற்றும் பொறியியல் துறை அதிகாரிகள் ரயில் இருப்புபாதையை சரி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
