×

இத்தாலி பிரதமர் மெலோனிக்கு மெலடி சாக்லேட் பரிசளித்த மோடி

 

ரோம்: இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனியுடனான ஆழமான நட்பை பிரதிபலிக்கும் வகையில் பிரதமர் மோடி மெலடி சாக்லேட்டை பரிசாக தந்தது தேசிய அரசியலில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. இத்தாலி சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு பெண் பிரதமர் ஜியார்ஜியா மெலோனிக்கு, இந்தியாவின் பார்லே நிறுவனம் தயாரிக்கும் ‘மெலடி’ சாக்லேட்டை பரிசாக அளித்தார். இதுதொடர்பாக சமூக ஊடகத்தில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மெலோனி, ‘‘பிரதமர் மோடி எனக்கு பரிசாக மிக மிகச் சிறந்த ஒரு மிட்டாயை கொண்டு வந்துள்ளார். அதுதான் ‘மெலடி’ (Melody)’’ எனக் கூறியபடி அந்த சாக்லேட்டை அவர் காட்ட அருகில் பிரதமர் மோடி புன்னகைத்தபடி இருந்தார்.

மெலோனி-மோடி இரு பெயர்களையும் இணைத்து, ‘மெலோடி’ என்ற புதிய வார்த்தையை இத்தாலி பிரதமர் மெலோனி கடந்த 2023ல் உருவாக்கினார். துபாயில் நடந்த பருவநிலை உச்சி மாநாட்டில், பிரதமர் மோடி உடனான நெருங்கிய நட்புறவை காட்டும் வகையில் மெலோடி என்ற ஹேஷ்டேக்குகளை பிரதமர் மெலோனி பயன்படுத்தினார். இதைத் தொடர்ந்து, மெலோடியின் உச்சரிப்பை ஒத்த மெலடி சாக்லேட்களை பிரதமர் மோடி பரிசளித்துள்ளார். இரு தலைவர்களின் ஆழமான நட்பை பிரதிபலிக்கும் இந்த பரிசு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், இந்திய அரசியல் களத்தில் கடும் விமர்சனங்களை எழுப்பி உள்ளது.

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில், ‘‘நமது தலைக்கு மேல் பொருளாதார புயல் வீசிக் கொண்டிருக்கிறது. ஆனால் நமது பிரதமர் இத்தாலியில் மிட்டாய்களை விநியோகிப்பதில் மும்முரமாக இருக்கிறார். இது தலைமைத்துவம் அல்ல. கேலிக்கூத்து. நாட்டில் விவசாயிகள், தொழிலாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் பிற அனைவரும் கண்ணீர் சிந்தும் நேரத்தில் பிரதமர் சிரித்துக் கொண்டும், ரீல்ஸ் செய்து கொண்டும் இருக்கிறார். இதை பாஜவினர் கைதட்டி ஆரவாரம் செய்கின்றனர்’’ என கூறி உள்ளார்.

Tags : Modi ,Meloni ,Rome ,Giorgia Meloni ,Italy ,India's… ,
× RELATED எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை: 2 இந்திய வீரர்கள் பலி