உபா சட்டத்தின் கீழ் கைதானவர்களுக்கும் ஜாமீன்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

 

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் கடந்த 2020ம் ஆண்டு போதை பொருள் கடத்தல் மற்றும் தீவிரவாதிகளுக்கு நிதியளித்ததாக சையது இப்திகர் என்பவர் என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.இதனையடுத்து அவருக்கு உபா சட்டத்தின் கீழ் ஐந்து ஆண்டுகள் தண்டனை வழங்கி சிறையில் அடைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து சையது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுக்களை கீழமை நீதிமன்றங்கள் நிராகரித்து விட்டது. இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். இதைத்தொடர்ந்து வழக்கில் வாதங்கள் அனைத்து நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் நேற்று வழங்கிய தீர்ப்பில்,\\” இந்த விவகாரத்தில் சையது இப்திகருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. மேலும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ்(உபா) கைது செய்யப்பட்டவர்களுக்கும் ஜாமீன் என்பது விதியாகவும். சிறை என்பது விதிவிலக்காகவும் இருக்க வேண்டும். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இருப்பினும் வழக்குகளின் தன்மைகளை பொறுத்து ஜாமீன் மறுக்கப்படலாம். உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற ஒரே காரணத்துக்காக ஜாமீன் மறுக்க முடியாது. இதனை விசாரணை நீதிமன்றங்களும். உயர் நீதிமன்றங்களும் கருத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் அகில இந்திய அளவில் இரண்டு சதவீதம் முதல் ஆறு சதவீதம் வரை மட்டுமே தண்டனைகள் வழங்கப்படுகிறது. மீதமுள்ள 94சதவீதம் முதல் 98சதவீதம் வரையில் பலரும் விடுவிக்கப் படுகின்றனர். ஜம்மு காஷ்மீரை பொருத்தமட்டில் தண்டனை விகிதம் ஒரு சதவீதத்திற்கும் கீழே உள்ளது. அதாவது 99சதவீதம் சதவீதம் வழக்குகளில் குற்றவாளிகள் விடுவிக்கப்படும் நிலை தான் உள்ளது. அப்படி இருக்கும்போது ஏன் ஜாமீன் மறுக்கப்பட்டது என்பது புரியவில்லை. எனவே இதில் மனுதாரர் அடுத்த ஏழு நாட்களுக்குள் என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிறகு ஜாமினில் விடுவிக்கப்பட வேண்டும்.

இருப்பினும் சம்மந்தப்பட்ட நபர் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். குறிப்பாக பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை அவர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதிகள் நிபந்தனையுடன் தீர்ப்பளித்து வழக்கை முடித்து வைத்தனர்.

உமர் காலித்துக்கு ஜாமீன் மறுத்த நீதிபதிகள் மீது விமர்சனம்
வழக்கு விசாரணையின்போது, டெல்லி கலவர வழக்கில் கைதான உமர் காலித், ஷர்ஜீல் இமாம் ஆகியோருக்கு ஜாமீன் வழங்க மறுத்து கடந்த ஜனவரியில் உச்ச நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் விமர்சித்தனர். விசாரணையில் ஏற்படும் நீண்ட தாமதத்தை ஜாமீன் வழங்குவதற்கான ஒரு காரணமாக கே.ஏ. நஜீப் வழக்கில் மூன்று நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில்,உமர் காலித் வழக்கை விசாரித்த அமர்வு கே.ஏ.நஜீப் வழக்கின் தீர்ப்பை முறையாகப் பின்பற்றவில்லை எனக் குறிப்பிட்டனர்.

கே.ஏ. நஜீப் வழக்கின் தீர்ப்பை விசாரணை நீதிமன்றங்களோ, உயர் நீதிமன்றங்களோ அல்லது உச்ச நீதிமன்றத்தின் குறைந்த நீதிபதிகள் (மூன்று நீதிபதிகள் அமர்வுகளுக்கு குறைவான) கொண்ட அமர்வுகளோகூட நீர்த்துப்போகச் செய்யவோ, தவிர்த்துச் செல்லவோ அல்லது புறக்கணிக்கவோ இயலாது என்று நீதிபதி நாகரத்னா அமர்வு தெரிவித்தது.

Related Stories: