ராய்பூர்: சட்டீஸ்கரில் நடைப்பயிற்சி சென்ற பாஜ எம்எல்ஏவிடம் மர்ம நபர்கள் செல்போனை பறித்து சென்றுள்ளனர். சட்டீஸ்கரில் முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையிலான பாஜ ஆட்சி செய்து வருகிறது. இங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகவும், பஸ்தாரில் நடக்கும் மத்திய மண்டல குழு கூட்டத்துக்கு தலைமை தாங்கவும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா 3 நாள் பயணமாக சட்டீஸ்கர் சென்றுள்ளார். இந்நிலையில், ராய்பூரில் சிவில் லைன்ஸ் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பிடபிள்யூடி மேம்பாலத்தில் பாஜ மூத்த எம்எல்ஏவும், முன்னாள் சபாநாயகருமான தரம்லால் கவுசிக் நேற்று காலை நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சிலர் தரம்லால் கவுசிக்கின் செல்போனை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மாநில பாஜ அரசை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் தன் எக்ஸ் பதிவில், “உள்துறை அமைச்சர் அமித் ஷா சட்டீஸ்கரில் உள்ளபோதே இந்த சம்பவம் நடந்திருப்பது மாநிலத்தில் நல்லாட்சி என்று சொல்லப்படும் முகத்தில் விழுந்த அடி.
திருட், கத்திக்குத்து, கொலை, கொள்ளை சம்பவங்கள் உச்சத்தில் உள்ளன. ஆனால் மாநிலத்தின் மிகவும் திறமையற்ற உள்துறை அமைச்சர் ரீல்ஸ் மற்றும் வரவேற்புகளில் மிகவும் பிசியாக இருக்கிறார்” என விமர்சித்துள்ளார்.
