செந்துறை அருகே வீட்டு பூட்டை உடைத்து நகை, வெள்ளி கொள்ளை: மர்ம நபர்களுக்கு வலை

அரியலூர்,மே 18: செந்துறை அருகே வீட்டு பூட்டை உடைத்து நகை, வெள்ளி கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் செந்துறை முத்து நகரில் வசிப்பவர் தமிழரசன் (54). அவரது மனைவி சந்திரா. இவர்கள் தங்களது பிள்ளைகளுடன் கடந்த 11ம்தேதி திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுவிட்டனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின்புறம் உள்ள கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அறையின் உள்பக்கமாக உள்ள பூட்டை உடைத்து அறைக்குள் சென்றுள்ளனர். அவர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 3/4 பவுன் தங்க நகைகள் 1/2 கிலோ வெள்ளி கொலுசுகளையும் திருடி சென்று விட்டனர். இந்நிலையில் நேற்று மதியம் தமிழரசன் குடும்பத்தினர் திருப்பதியில் இருந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது தங்களது வீட்டில் திருட்டு நடந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து செந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பதிக்கு சென்றவர் வீட்டில் நடந்த இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

Related Stories: