ஒரே நாடு, ஒரே மொழி என்ற கொள்கையை கொண்டுவந்து தமிழக கலாசாரத்தை அழிக்க முற்படுகிறார் மோடி சுரண்டையில் ராகுல் காந்தி சாடல்

சுரண்டை, மார்ச் 2: ஒரே  நாடு, ஒரே மொழி என்ற கொள்கையை கொண்டுவந்து தமிழக கலாசாரத்தை பிரதமர் மோடி அழிக்க முயல்வதாக சுரண்டையில் பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய முன்னாள் தலைவர் ராகுல்  காந்தி சாடினார். தென்காசி மாவட்டம், ஆலங்குளம், பாவூர்சத்திரம் பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு சுரண்டைக்கு  வருகை தந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அகில இந்திய தலைவர், ராகுல் காந்திக்கு சுரண்டை நகர காங்கிரஸ் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ராகுல் காந்தி, மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி,  மாவட்டத் தலைவர் பழனி நாடார் உள்ளிட்டோரை சுரண்டை நகரத் தலைவர் எஸ்.கே.டி.  ஜெயபால், மாவட்ட துணைத்தலைவர் பால் என்ற சண்முகவேல், மாவட்டப் பிரதிநிதி  சமுத்திரம் தலைமையில் காங்கிரசார் உற்சாகமாக வரவேற்றனர். இதைத்தொடர்ந்து சுரண்டை  சிவகுருநாதபுரம் மாணவர்கள் சிலம்பாட்டம் ஆடி ராகுல்காந்தியை வரவேற்றனர். அவரை காண சுரண்டை அண்ணா சிலை பகுதியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு நின்றனர். முதலில் காரில் இருந்தபடியே பேச இருந்த ராகுல் காந்தி, மக்களை கண்ட உற்சாகத்தில் காரை விட்டு இறங்கிவந்ததோடு மார்க்கெட் முன்பாக அமைக்கப்பட்ட சிறிய மேடை மீது ஏறி  பேசினார். அவரது பேச்சை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி மொழிப் பெயர்த்தார்.

அப்போது ராகுல் காந்தி பேசுகையில், ‘‘ ஒரே  நாடு, ஒரே மொழி என்ற கொள்கையை கொண்டுவந்து தமிழக கலாசாரத்தை அழிக்க  முற்படுகிறார் பிரதமர் நரேந்திர மோடி. சிறப்பு வாய்ந்த தமிழக கலாசாரம் இந்திய கலாசாரம் இல்லையா? தமிழ் மொழி இந்திய மொழி  இல்லையா?  என மக்களிடம் கேள்வி எழுப்பினார். தமிழக முதல்வர் எடப்பாடி ஊழல் செய்துள்ளதால், சிபிஐயை  கைவசம் வைத்துள்ள பிரதமர் மோடியைப் பார்த்து பயப்படுகிறார். மோடி கட்டுப்பாட்டில் இயங்கும் எடப்பாடி அரசை வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களாகிய நீங்கள் தூக்கிஎறிய வேண்டும்’’ என்றார். இதில்  நாட்டாண்மை ராமராஜ், தெய்வேந்திரன், சமுத்திரம்,  எஸ்.ஆர். பால்த்துரை, சிங்கராஜ், பிரபாகர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் ராகுல்காந்தியை உற்சாகமாக வரவேற்று கோஷமிட்டனர். இதனிடையே தென்காசி மாவட்டத்தில் பிரசாரக் கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்த மாவட்ட  காங்கிரஸ் தலைவர்  பழனி நாடாரை ராகுல் காந்தி பாராட்டினார்.புண்ணிய பூமி

 தமிழகத்தில் காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு  திட்டம் பொருளாதார வல்லுநர்களால் பாராட்டப்பட்டதோடு நாடு முழுவதும்  செயல்படுத்தப்பட்டது. அத்தகைய கர்மவீரர் காமராஜர் பிறந்த புண்ணிய பூமி இது.   தமிழக கலாசாரம் மிகவும் தொன்மை வாய்ந்தது. உங்களின் இந்த ஆரவாரமான  வரவேற்பால் தமிழக வருகை எனக்கு மகிழ்ச்சி தருகிறது’’ என்றார்.

Related Stories:

>