?பரிகாரம் என்பது என்ன? அதை கட்டாயம் செய்ய வேண்டுமா? செய்யாமல் போனால் கெடுதல் நடக்குமா?
– த.சத்தியநாராயணன், அயன்புரம்.
நேராது. செய்த தவறை நினைத்து வருந்தி அதே தவறு மீண்டும் நேராமல் பார்த்துக் கொள்வதோடு, நாம் செய்த தவறால் பாதிக்கப்பட்டவர்களிடம்மன்னிப்பு கோருவதே உண்மையான பரிகாரம். மற்றபடி நீங்கள் குறிப்பிடும் ஜோதிட ரீதியான பரிகாரம் என்பது ஆன்மிகம் சார்ந்த நம்பிக்கை. இது அவரவர் பின்பற்றும் மதம் சார்ந்த சம்பிரதாயங்களுக்கு ஏற்றவாறு மாற்றிச் சொல்லப்படுகிறது. ஜோதிடவியல் பரிகாரம் பற்றி பேசவில்லை. ஜோதிடர்கள்தான் அவரவர் நம்பிக்கைக்கு ஏற்றவாறு பரிகாரத்தைச் சொல்கிறார்கள். அவரவர் செய்த கர்மவினைக்குத் தகுந்தாற்போல்தான் பலன்கள் என்பது நடைபெறுகிறது. பாவம் செய்தவன் அதற்கான தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். பரிகாரம் செய்வதன் மூலம் அந்த தண்டனையை ஏற்றுக்கொள்ளக் கூடிய மனப்பக்குவம் என்பது வந்து சேர்ந்துவிடும். அந்த மனப்பக்குவத்தை இயற்கையாகவே கொண்டிருப்பவன் பரிகாரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதே உங்கள் கேள்விக்கான நேரடியான பதில்.
?அமாவாசை அன்று மட்டும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமான துன்பத்திற்கு ஆளாவதேன்?
– ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.
அமாவாசை நாள் அன்று சந்திரனின் ஒளி இந்த பூமியின் மீதும், அதில் வாழுகின்ற நம் மீதும் விழுவதில்லை. சந்திரனைத்தான் மனோகாரகன் என்று ஜோதிடம் வலியுறுத்துகிறது. மனோபலம் என்பது அந்த நாளில் குறைந்திருக்கிறது. நோயாளிகளைப் பொறுத்த வரை அந்த நோயினால் அவர்களுக்கு உண்டாகும் வலியைத் தாங்கும் மனோபலம் என்பது குறைவதால், அவ்வாறு எண்ணத் தோன்றுகிறது. மற்றபடி அமாவாசை நாளில் மட்டும் நோயின் வீரியம் என்பது அதிகரிப்பதில்லை. மனோபலம் குறைவதால் நோயின் வீரியம் கூடுவதாக உணர்கிறார்கள்.
?சனி பகவானை நேருக்கு நேர் நின்று வணங்கக் கூடாது என்று கூறுவது ஏன்?
– வண்ணை கணேசன், சென்னை.
சனி என்பது நவகிரஹங்களில் ஒன்று. அந்த கிரஹத்தினை பகவான் என்ற அடைமொழியோடு நம்முடைய சாஸ்திரத்திலும் சரி வேதத்திலும் சரி எங்கும் குறிப்பிடவில்லை. ஆண்டவன் இட்ட பணியைச் செய்யும் பணியாளர்களே நவகிரஹங்கள். சிவாலயத்தில் உள்ள மற்ற பரிவார தேவதைகளைப் போல நவகிரஹங்களையும் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். எந்த சந்நதியிலுமே நாம் நேருக்கு நேராக நின்று தரிசனம் செய்யக் கூடாது. பக்கவாட்டில் இருந்துதான் தரிசனம் செய்ய வேண்டும். அதே போல நவகிரஹங்களையும் பக்கவாட்டில் நின்று வணங்கிவிட்டுச் சென்றால் போதுமானது. கிரஹங்களுக்கு தனிப்பட்ட முக்கியத்துவம் தந்து வணங்க வேண்டிய அவசியமில்லை என்பதே உங்கள் கேள்விக்கான நேரடியான பதில்.
?விரத உணவில் உப்பு சேர்க்கலாமா?
– ஏ.ஜெரால்டு, வக்கம்பட்டி.
அது நீங்கள் மேற்கொள்ளும் விரதத்தைப் பொறுத்தது. விரதம் என்பது மனக்கட்டுப்பாட்டினை குறிக்கும் வார்த்தை ஆகும். உப்பில்லா உணவினைச் சாப்பிடுகிறேன் என்று வேண்டுதல் வைத்து நீங்கள் விரதம் இருந்தால், விரதத்தின் முடிவில் உப்பில்லாமல்தான் சாப்பிட வேண்டும். மற்றபடி சாதாரணமாக விரதம் முடிப்பவர்கள் அவ்வாறு உப்பில்லாமல் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை.
?திருமணத்திற்கு பத்து பொருத்தங்கள் என்கிறார்கள். ஆனால் பன்னிரண்டு பொருத்தங்கள் இருக்கிறதே?
– மு.செல்வம், ராமநாதபுரம்.
ஒரு சிலர் பத்து பொருத்தம் என்கிறார்கள். ஒரு சிலர் 12 பொருத்தம் என்கிறார்கள். இன்னும் சிலர் 27, 36 என்ற எண்ணிக்கையிலும் பொருத்தம் பார்க்கிறார்கள். இவை அனைத்தும் நட்சத்திரத்தின் அடிப்படையில் சொல்லப்படுபவை. இவை எல்லாவற்றையும்விட மனப்பொருத்தம் என்பதுதான் முக்கியம். மனப்பொருத்தம் என்ற ஒன்று இருந்தாலே திருமணத்தை முடித்துவிடலாம். இந்த மனப்பொருத்தத்தைத் தருவதுதான் ஜாதக பலம் என்பது. ஆக, வெறும் நட்சத்திரத்தைக் கொண்டு இதுபோல் 10, 12 பொருத்தங்கள் பார்ப்பதை விடுத்து இருவரின் ஜாதகங்களில் உள்ள கிரஹநிலைகள் பொருந்தி உள்ளனவா என்பதைப் பார்த்து திருமணத்தை நடத்துவதே நல்லது. இருவர் ஜாதகங்களிலும் கிரஹநிலைகள் பொருந்தி இருந்தாலே மனப்பொருத்தம் என்பதும் தன்னாலே வந்துவிடும்.
?மாந்திக்குப் பரிகாரம் என்ன?
– பொன்விழி, அன்னூர்.
மாந்தி என்பது நவகிரஹங்களில் ஒன்று அல்ல. சனிகிரஹத்தின் துணைக்கோள்தான் மாந்தி. சனி தரும் மொத்த கெடுபலன்களை மாந்தி தரும் என்பது ஜோதிட விதி. எல்லா கிரஹங்களுமே சூரியனிடமிருந்துதான் ஒளியைப் பெற்று பிரதிபலிக்கின்றன. மாந்தியின் தாக்கம் பெற்றவர்கள் மிகவும் மந்தமாக இருப்பார்கள். மாந்தியின் தாக்கம் பாதிக்காமல் இருக்க, தினந்தோறும் அதிகாலையில் வெட்டவெளியில் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.
?இறைவனை வழிபட காலை,மதியம், மாலை அல்லது இரவு இவற்றில் எந்த நேரம் சிறந்தது?
– சு.ஆறுமுகம், கழுகுமலை.
இறைவனை வழிபடுவதற்கு நேரம் காலம் ஏது? சதா சர்வ காலமும் நம்முடனேயே இறைவன் பயணிக்கிறான் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். எல்லா சூழலிலும் இறைவன் எனக் கருகிலேயே இருக்கிறான் என்பதை உணர்ந்துகொண்டால், எப்பொழுதும் வழிபடலாமே. அதே நேரத்தில், ஒரு ஆலயத்திற்குச் சென்று இறைவனை வணங்குவதற்கு என்று எடுத்துக் கொண்டால், அதிகாலையில் நடக்கும் திருப்பள்ளியெழுச்சியும், இரவில் நடை சாற்றப்படும்போது நடத்தப்படும் அர்த்தஜாம பூஜையும் தனித்துவம் வாய்ந்தது.
?சில நட்சத்திரத்தில் ஒருவர் இறந்தால், சில மாதங்கள் வீடு பூட்டி வைக்க வேண்டும் என்கிறார்களே ஆறு மாதம், மூன்று மாதம் எல்லாம் வீட்டை பூட்டி வைப்பது சாத்தியமா?
– வித்யா, கரூர்.
சில விஷயங்களை சாஸ்திர ரீதியாகச் சொல்லுகின்ற பொழுது, நடைமுறைக்கு ஒத்து வராத நிலையில், அதற்கான மாற்று வழிகளையும் சொல்லுவார்கள். நீங்கள் சொல்வது இறந்தால் தோஷம் உள்ள நட்சத்திரங்களை பற்றிய `தனிஷ்டா பஞ்சமி’ என்று சொல்லப்படும் விஷயம். உதாரணமாக, உத்தர நட்சத்திரத்தில் ஒருவர் இறந்து போனால், மூன்று மாதம் வீடு மூடப்பட வேண்டும் என்று போட்டிருக்கும். வீட்டை பூட்டிவிட்டு எங்கே போய் வாழ்வது? ஆனால், அதே பஞ்சாங்கத்தில் அதற்கான மாற்று வழி கொடுத்திருக்கிறார்கள். அதாவது அந்த இறந்தவர் உபயோகித்த பொருள்களை ஒரு பெட்டியில் போட்டு பூட்டி வைத்து, அந்தப் பெட்டி மீது மூன்று மாதம் வரை ஒரு வெண்கலக் கிண்ணத்தில் நல்லெண்ணெய் தீபம் வைத்து காலையிலும் மாலையிலும் வழிபாடு நடத்த வேண்டும். மூன்று மாதம் ஆனவுடன் அந்தக் கிண்ணத்தை தானம் செய்துவிட வேண்டும். இது எளிய வழிதானே. எனவே சாஸ்திரங்களில் நடைமுறைக்கு ஏற்ற மாற்று வழிகளும் உண்டு. அதை உரியவர்களிடம் கேட்க வேண்டும்.
உங்களுக்கு ஏற்படும் ஜோதிட சந்தேகங்களை கேள்விகளாக எழுதி அனுப்பிவைக்கவும். ஏன் எதற்கு எப்படி? தினகரன், ராசி பலன்கள் தபால் பை எண். 2908, மயிலாப்பூர், சென்னை – 600 004.
