நம்பிக்கையை நனவாக்கும் நங்கநல்லூர் அனுமனின் மகிமை

நங்கநல்லூர்ஸ்ரீ ஆதிவ்யாதி ஹர பக்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஒவ்வொரு வாரம் சனிக்கிழமை அன்று மாலை ரக்ஷா வைபவம் நடைபெறும். அந்த ஆலயத்தில் ரக்ஷை கட்டிக்கொள்ள வரும் பக்தர்களுக்கு நான் ரக்ஷை கட்டி விடுவேன். பக்தர்களின் அவர் அவர் வேண்டுகோளுக்கு இணங்கஸ்ரீ ராமதூதன் அருள் கிடைக்கிறது. ஒருமுறை தென் சென்னை பகுதியிலிருந்து ஒரு தம்பதியினர் ரக்ஷை கட்டிக்கொள்ளும்போது எங்களுக்கு திருமணமாகி ஐந்து வருடங்களுள் ஆகிறது. நாங்கள் இருவரும் ஐ.டி. துறையில் வேலை பார்க்கிறோம்.

பகவான் எங்களுக்கு சுற்றமும் நட்பும் எல்லாம் நன்றாக கொடுத்துள்ளார். ஆனால், எங்கள் மகிழச்சிக்கென்று மழலைச் செல்வம் கொடுக்கவில்லை. எல்லாம் இருந்தும் இவை இல்லாததனால் குடும்பத்தில் வருத்தமும் அமைதியும் குறைந்து வருகிறது. எல்லாவித முயற்சியும் எடுத்து விட்டோம். கடைசியாக ராம காரியத்தை எப்படி இந்த அஞ்சனை புத்திரன் முடித்து கொடுத்தாரோ அது போல் முடித்து கொடுக்க வேண்டும் எங்களுக்கு என்று முறையிட்டனர்.

அப்போது, நான் எல்லா காரியத்திலும் வெற்றியும் சித்தியும் கிடைக்க இந்த விஸ்வரூப ஆஞ்சநேயர் நிச்சயம் அருள்புரிவார் என்று கூறினேன். முதலில் நீங்கள் இருவரும் ஐந்து வாரம் தொடர்ச்சியாக இந்த ஆலயத்திற்கு வந்து ஐந்து முறை ஆலயத்தில் உள்ள உட்பிரகாரதத்தை வலம் வந்து பகவானிடம் தங்களுடைய மழலைச் செல்வ வரம் பிரார்த் தனையை மனதார வேண்டிக்கொண்டு ஐந்து நமஸ்காரம் செய்யுங்கள் என்று அவர்களுக்கு சொன்னேன்.

அவர்களும் நான் கூறியது போல் வாரா வாரம் வந்தனர். ராம காரியத்தையே சிறப்பாக முடித்து கொடுத்த அனுமன் தன்னை நாடிவரும் பக்தர்களின் வேண்டுதலை பூர்த்தி செய்யாமல் இருப்பாரா?மூன்று மாதம் கழித்து அந்த அன்பர் ஆலயத்திற்கு வந்து என்னிடம் பகவான் எங்களுக்கு இருள் என்ற இடத்திலிருந்து ஒளி என்ற வழியை காட்டியுள்ளார் என்று கூறினார். அந்த அன்பர் சொல்லும்போது அவர் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வந்தது.

நான் உடனே இந்த ஆதிவ்யாதி ஹரபக்த ஆஞ்சநேய ஸ்வாமி எப்போதும் எந்த நேரத்திலும் பக்தனின் உன்னதமான வேண்டுதலை கைவிடாமல் கைகொடுப்பார் என்றேன். அந்த அன்பர் சாஷ்டாங்கமாக பகவானுக்கு நமஸ்காரம் செய்து தன்னுடைய மனைவியின் பிரசவம் சுக பிரசவமாக இருக்க வேண்டும் என்று மீண்டும் ஒரு வேண்டுதலை விடுத்தார்.

நாட்கள் கடந்தது. அந்த அன்பரின் வேண்டுதல்படி அவர் மனைவிக்கு சுகப் பிரசவம் ஏற்பட்டு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள்.உங்கள் வாழ்க்கையில் எந்த விதமான குழப்பம் இருந்தாலும் இந்த பகவானிடம் சரணடைந்து நாம் மனமுடன் உருகி உன்னதமான பிரார்த்தனையை மேற்கொண்டால், துஷ்ட சக்திகள் விலகி நாம் செய்யும் நல்ல செயல்களில் மாருதி கிருபை நிச்சயம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. நம்பிக்கை கொண்ட மனம் ஒருபோதும் வெறுமையடையாது.அஞ்சநேயரிடம் சரணடைந்த மனம் நிச்சயம் நன்மை காணும்.

ரமணி அண்ணா

Related Stories: