கன்னிகைப்பேர் கிராமத்தில் கழிவுநீர் குளமான குடிநீர் குளம்

 

ஊத்துக்கோட்டை: கன்னிகைப்பேர் கிராமத்தில் கழிவு நீர் குளமாக மாறிய குடிநீர் குளம், தூர்வாரி சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு பழைய ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் பெரியகுளம் என்ற ஒரு குளம் உள்ளது. இது 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த குளமாகும் இந்த குளத்தை சுமார் 60 வருடங்களுக்கு முன்பு இப்பகுதி மக்கள் குடிநீர் குளமாக பயன்படுத்தி வந்தனர். ஆனால், தற்போது இந்த குளம் புதர்கள் மண்டி செடி, கொடிகள் படர்ந்துள்ளது. மேலும், வீடுகளில் இருந்து வெளியேரும் கழிவுநீர் இந்த குளத்தில் கலக்கிறது.

சிலர் இறைச்சிகழிவுகள், குப்பைகளை இந்த குளத்தின் அருகில் கொட்டுகிறார்கள். இதனால், இந்த குளம் கழிவு நீர் குளமாக மாறிவிட்டது. மேலும், தற்போது இந்த குளத்தில் செடி, கொடிகள் படர்ந்து குளமே தூர்ந்து விட்டது. எனவே, தூர்ந்து விட்ட குளத்தை தூர்வாரி சீரமைத்து அதை சுற்றிலும் கரையை பலப்படுத்தி படிகட்டுகள் கட்டி பூங்கா அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: கன்னிகைப்பேர் கிராமத்தில் பழைய ஊராட்சி மன்றம் அருகில் உள்ள பெரியகுளம் 2 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இக்குளம் 100 வருடம் பழமை வாய்ந்த குளமாகும் சுமார் 60 வருடத்திற்கு முன்பு இக்குளத்தை இந்த பகுதியை சேர்ந்த மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தி வந்தனர்.

மேலும் ஆடு, மாடுகள் புல், வைக்கோல்களை மேய்ந்து விட்டு இந்த குளத்தில் தண்ணீர் பருகும், மேலும் வீடுகளில் சிறு தோட்டம் வைத்துள்ளவர்கள். இந்த தண்ணீரை ஊற்றி மிளகாய் உள்ளிட்ட செடிகள் வைத்து சிறு விவசாயம் செய்தனர். மேலும், இது குறித்து கன்னிகைப்பேர் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் அப்பகுதி மக்கள் பல முறை மனு கொடுத்துள்ளனர். தூர்வார கிராம சபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. ஆனால், இதுவரை யாருமே எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அல்லது தன்னார்வலர்கள் குளத்தை தூர்வாரி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: