தாம்பரம்: செம்பாக்கம் தனியார் பள்ளி அருகே 24 மணிநேரமும் டாஸ்மாக் பார் இயங்கி வரும் நிலையில், நுண்ணறிவு பிரிவு போலீசார் மற்றும் கலால் போலீசார் உடந்தையாக இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். தாம்பரம் அடுத்த சேலையூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பள்ளிகள் கல்லூரிகள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், ஓட்டல்கள், பல்பொருள் அங்காடிகள், கடைகள், பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. கல்வி, வேலை, வியாபாரம், மருத்துவம் என பல்வேறு தேவைகளுக்காகவும் பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்வதால் சேலையூர் பகுதி எப்போதும் மக்கள் கூட்டம் மிகுந்து பரபரப்பாக காணப்படும்.
இப்பகுதியில் உள்ள பாரத மாதா சாலை, தாம்பரம் – வேளச்சேரி பிரதான சாலை, சேலையூர் – அகரம் தென் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10க்கும் மேற்பட்ட அரசு டாஸ்மாக் கடைகள் மற்றும் டாஸ்மாக் பார்கள் செயல்பட்டு வருகின்றது. இதில், பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் வீடுகள், பள்ளி கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள் அருகே அமைத்துள்ளது. இதனால் பொதுமக்கள் தினமும் ஏதாவது ஒரு பிரச்னையில் சிக்கி பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து எந்த அதிகாரிகளும் இதுவரை நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை என கூறப்படுகிறது.
இதில் சேலையூர் காவல் நிலைய நுண்ணறிவு பிரிவு மற்றும் காலால் போலீசார் தலையீடு இருப்பதால் பார் உரிமையாளர்களும் எந்த ஒரு அச்சமுமின்றி 24 மணி நேரமும் மதுபாட்டில்களை விற்பனை செய்து வருகின்றனர். இதில் குறிப்பாக தாம்பரம் – வேளச்சேரி பிரதான சாலையில் செம்பாக்கம், காமராஜபுரம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள தனியார் பள்ளிக்கு மிக அருகே அரசு டாஸ்மாக் கடை(எண்: 4161) இயங்கி வருகிறது. இந்த கடை இதற்கு முன்பு பீர்க்கன்காரணை, சீனிவாசா நகர் பகுதியில் மேம்பாலத்தின் கீழ் செயல்பட்டு வந்தது.
இந்த மதுபான கடையின் அருகே பெருங்களத்தூர் ரயில் நிலையம், பள்ளி, தேவாலயம், கோயில்கள், கடைகள் என பல இருந்ததாலும், இந்த மதுபான கடை வழியாக பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அலுவலகம் செல்வோர் என தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ரயில் நிலையம் சென்று ரயில்கள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள முக்கியமான பகுதியில் மதுபான கடை இருப்பதால் அங்கு வரும் குடிமகன்கள் கடையில் மதுபான பாட்டில்களை வாங்கி சாலையிலேயே அமர்ந்து மது அருந்துவது, பாட்டில்கலை சாலையில் உடைப்பது, குடிபோதையில் ஆங்காங்கே விழுந்து கிடப்பது, அவ்வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களிடம் அவதூறாக பேசி தகாத செயலில் ஈடுபடுகின்றனர்.
எனவே அப்பகுதியில் உள்ள மதுபான கடையை அகற்ற வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள், குடியிருப்போர் நல சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், சில அரசியல் கட்சியினரும் அங்கிருந்து கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அந்த கடை அங்கிருந்து நிரந்தரமாக அகற்றப்பட்டது. ஆனால் சிறிது நாட்களில் மீண்டும் செம்பாக்கம், காமராஜபுரம் பகுதிக்கு அந்த கடை மாற்றப்பட்டது. தற்போது இந்த கடையில் நுண்ணறிவு போலீசார் மற்றும் கலால் போலீசார் ஆதரவுடன் 24 மணி நேரமும் மது பாட்டில்கள் விற்பனை அமோகமாக நடக்கிறது.
காவல்துறையினர் ஆதரவு இருப்பதால் எந்த ஒரு அச்சமுமின்றி வெளிப்படையாகவே குவாட்டர் ரூ.300 முதல் ரூ.400 வரையும், கட்டிங் ரூ.150 முதல் ரூ.200 வரையும் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதற்கான பணத்தை ரொக்கமாகவும், க்யூஆர் கோடு ஸ்கேனர் மூலமாகவும் பெறுகின்றனர்.
மதுபானம் வாங்குபவர்களுக்கு அங்கேயே நான்கு விதமான சைட் டிஷ், கிளாஸ், தண்ணீர் வழங்கப்படுகிறது. புதிய அரசு பொறுப்பேற்றவுடன் தமிழக முழுவதும் பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத்தலங்கள் இருக்கும் பகுதிகளில் சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு இருக்கும் 717 டாஸ்மாக் கடைகளை முதற்கட்டமாக அகற்ற முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். ஆனால் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் பள்ளி, கல்லூரிகள் வழிபாட்டுத் தளங்களின் மிக அருகே தொடர்ந்து இயங்கி வருகிறது, என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘பாரதமாதா சாலை, சேலையூர் – அகரம் தென் சாலையில் உள்ள இந்திரா நகர், காமராஜபுரம் உட்பட சேலையூர் காவல் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடை பார்கள் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. இதனால் டாஸ்மாக் கடைகளுக்கு வரும் குடிமகன்கள் குடித்துவிட்டு சாலையை கடக்கும்போது விபத்தில் சிக்குகின்றனர். மதுபோதையில் சாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபடுகின்றனர். எனவே, பள்ளி, கல்லூரிகள் அருகே 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் சார்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் சேலையூர் காவல் நிலைய போலீசாரிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
டாஸ்மாக் கடைகள் 24 மணி நேரமும் செயல்படுவதற்கு சேலையூர் காவல் நிலைய நுண்ணறிவு பிரிவு மற்றும் காலால் போலீசார் முக்கிய கரணம். ஒவ்வொரு கடைக்கும் மாமுல் வசூலிக்கின்றனர். புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுப்பதாக கூறி பெயரளவில் சம்பந்தப்பட்ட கடைகளில் இருந்து ஒருவரை கைது செய்து நடவடிக்கை எடுத்தது போல் காட்டிக் கொள்ளாமல் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையூறாக இருக்கும் மதுபான கடைகளை நிரந்தரமாக அகற்ற வேண்டும், என்ற கோரிக்கை விடுக்கின்றனர்.
திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள பாரில் விடிய விடிய மது விற்பனை: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
மாதவரம், மணலி, எண்ணூர், திருவொற்றியூர், 200 அடி சாலை போன்ற நெடுஞ்சாலை பகுதிகளில் ஏராளமான அரசு மதுபான கடைகள் உள்ளது. இந்த கடைகளில் பாட்டிலுக்கு மேல் பத்து ரூபாய் வாங்குவதாகவும், மதுபான கடைகள் இயங்கும் பார்களில் அதிகாலையிலேயே கள்ளத்தனமாக மதுபானங்கள் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. மதுவிற்கு அடிமையான தொழிலாளர்கள் வேறு வழியின்றி காலையிலேயே அதிக விலை கொடுத்து மதுபானங்களை வாங்கி குடிக்கின்றனர். மதுபான பாரில் குடித்தால் செலவாகும் என்பதால் மதுபான கடைக்கு அருகே பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில் மது அருந்திவிட்டு அங்கேயே பாட்டிலையும், கிளாசையும் வீசி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இளைஞர்கள் சிலர் அந்தந்த பகுதிகளில் இயங்கும் அரசு மதுபான கடைக்குச் சென்று மது பாட்டிலுக்கு மேல் 10 ரூபாய் வாங்க கூடாது. அரசு நிர்ணயித்த நேரத்திற்கு முன்னதாகவோ, பின்னதாகவோ மது பாட்டிலை கள்ளத்தனமாக அதிக விலைக்கு விற்க கூடாது என எச்சரித்து வருகின்றனர். அதையும் மீறி பாட்டலுக்கு மேல் 10 ரூபாய் வாங்கினாலோ, அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் கள்ளத்தனமாக மதுபானங்களை விற்றாலோ அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் சட்ட விதிகளுக்கு புறம்பாக விற்பனை செய்யும் மதுபான கடை மற்றும் பார் நடத்தும் உரிமையாளர்கள் பெரும் கலக்கம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு மதுபான பாரில் விடிய விடிய மது விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இங்கு அதிகாலை மதுபானம் விற்பதாக இளைஞர்கள் சிலர் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாகி பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அறிந்த மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து பார் ஊழியர்களான திருவொற்றியூர் கார்த்திக் (36), பிரபாகரன் (40) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
