காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி முறிவு எதிரொலி மக்களவையில் திமுக உறுப்பினர்களுக்கு இருக்கைகளை மாற்றித் தர வேண்டும்: சபாநாயகருக்கு கனிமொழி எம்பி கடிதம்

 

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றது. அந்த கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, அதில் 5 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இந்நிலையில், தேர்தல் முடிவில் தவெக ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாததால், தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்தது. இது கூட்டணிக்குள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு திமுக நிர்வாகிகள் உடனடியாக பதிலடியும் கொடுத்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இதில், தேர்தலுக்குப் பிறகு அல்ல, தேர்தல் நடக்கும் போதே உண்மையாக நடந்து கொள்ளாத கட்சி தான் காங்கிரஸ் கட்சி. அதை எல்லாம் பொறுத்துக் கொண்டு, பெருந்தன்மையோடும் பொறுப்போடும் நடந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நேரில் வந்து வெற்றி பெற்றதற்காக ஒரு நன்றி கூட தெரிவிக்காது, முதுகில் குத்தி, மாபெரும் துரோகத்தைச் செய்துள்ளது காங்கிரஸ் கட்சி. பாஜ பல மாநிலங்களில் எதைச் செய்கிறதோ, அதையே காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் திமுகவுக்கு செய்துள்ளது. தோழமை சக்தியின் காலை வாரி, நட்பு சக்திகளுக்குத் துரோகம் செய்த காங்கிரஸ் கட்சியின் திடீர் மாற்றத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி முறிந்த நிலையில் மக்களவையில் திமுகவுக்கான இருக்கைகளை மாற்றி தர வேண்டும் என்று மக்களவை சபாநாயகருக்கு கனிமொழி எம்பி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: காங்கிரஸ் உடனான கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அருகிலேயே திமுக உறுப்பினர்கள் அமர்வது இனி பொருத்தமாக இருக்காது. தமிழகத்தில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல்களைக் கருத்தில் கொண்டு இந்த மாற்றம் அவசியமாகிறது. மக்களவையில் 3வது பெரிய கட்சியாக உள்ள திமுக, இனி வரும் காலங்களில் தனது கருத்துக்களைச் சுதந்திரமாகவும், தனித்துவமாகவும் முன்வைக்க விரும்புகிறது. திமுக உறுப்பினர்கள் தங்கள் நாடாளுமன்ற பொறுப்புகளை திறம்பட நிறைவேற்றவும், தங்குதடையின்றி செயல்படவும் ஏதுவாக தனி இருக்கைகள் ஒதுக்கப்பட வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

 

Related Stories: