சிவகாசி: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. விஜய் தேர்தல் பிரசாரங்களில் பாஜவை தங்களது கொள்கை எதிரி என்று விமர்சித்தார். பாசிச, மதவாத சக்திகளுக்கு எதிராக தனது அரசியல் இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம், சிவகாசி தொகுதியில் வெற்றிபெற்ற தவெக எம்எல்ஏ கீர்த்தனா, பிரதமர் மோடிக்கு ஆதரவாக பேட்டியளித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த பேட்டியில் கீர்த்தனா கூறுகையில், ‘‘தமிழகத்தில் ஏதாவது ஒன்று நடக்கவில்லை என்றால் உடனே மோடிதான் காரணம், பாஜதான் காரணம், என்டிஏ கூட்டணிதான் காரணம் என்று குற்றம் சாட்டுகின்றனர். அதே மோடிதான் உஜ்வாலா திட்டத்தின் மூலம் 10 கோடி ஏழை மக்களுக்கு காஸ் சிலிண்டர் வழங்கினார். நாமெல்லாம் முன்பு காஸ் சிலிண்டர் பதிந்தால் 15 நாள் 30 நாள் கழித்து தான் சிலிண்டர் கிடைக்கும். அதனை மாற்றி தற்போது உடனே சிலிண்டர் வழங்கியது மோடி தான். மானியத்தொகை வழங்கியது யார்? அதையெல்லாம் மறந்துவிட்டு தற்போது அமெரிக்க – ஈரான் போர் நடந்து வரும் வேளையில் காஸ் தட்டுப்பாடு என்று பேசக்கூடாது’’ என்று கூறியுள்ளார்.
