தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

 

சென்னை: தமிழகத்தில் புதிய ஆட்சி அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக எடுத்திட வேண்டும், என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தவெக 108 இடங்களிலும், திமுக 59 தொகுதிகளிலும், அதிமுக 47 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. எந்த கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கான தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதாவது 234 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட தமிழகத்தில் ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தமிழ்நாட்டில் தொங்கு சட்டசபை உருவானது. அதிக இடங்களை பிடித்த தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதற்கான முயற்சியில் இறங்கினார். இந்த நிலையில் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின், ‘தமிழக மக்கள் ஒரு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள். 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஜனநாயக முறைப்படி, அதிக இடங்களை பிடித்த விஜயின் கட்சி ஆட்சியமைக்க உரிமை கோருவதில் எந்த தவறும் இல்லை. அவர்கள் ஆட்சியமைப்பதை நாங்கள் தடுக்க மாட்டோம். விஜய் தலைமையிலான புதிய அரசு அமையட்டும். அவர்கள் மக்களுக்கு கொடுத்துள்ள வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றுகிறார்கள் என்பதை நாங்கள் உன்னிப்பாகக் கவனிப்போம். ஒரு பொறுப்பான எதிர்க்கட்சியாக நாங்கள் செயல்படுவோம், என்று அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போதைய சூழலில் உருவாகும் அரசியல், நிர்வாக நிலைமைகளை ஆராய்ந்து அவசர முடிவுகளை உடனடியாக எடுக்கும் அதிகாரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்குவது என்றும் சென்னையில் நேற்று முன்தினம் நடந்த திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால், மு.க.ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார் என்ற பரபரப்பு திமுகவினரிடையே ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்புக்கு மத்தியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் பொன்முடி, கனிமொழி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் தமிழகத்தில் ஆட்சி அமைக்க ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலை குறித்து விரிவாக ஆராயப்பட்டது. அடுத்தக்கட்டாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி, மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டு விட்டது. ஏற்கனவே இருந்த சட்டமன்றத்தையும் கலைத்து ஆளுநர் ஆணையும் பிறப்பித்து விட்டார். இப்படியொரு நிலையில், தேர்தலில் வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதற்கும், மாநிலத்தின் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கும் புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மிக முக்கிய பணி. இந்த சூழ்நிலையில் அரசு அமைவதில் தாமதம் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு, அரசியல் சட்டப்படி, புதிய ஆட்சி அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக எடுத்திட வேண்டும் என திமுகவின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Related Stories: