விஜய்யை 2ம் கட்ட தலைவர்கள் தவறாக வழிநடத்துகிறார்கள் திமுக கூட்டணியை விமர்சித்து விட்டு கூசாமல் ஆதரவு கேட்பது சரியா? சிந்தனை செல்வன் குற்றச்சாட்டு

 

சென்னை: அசாதார சூழலை கையாளுவதில் தடுமாறி போயிருக்கிறார் விஜய், தவெகவில் விஜய்யை 2ம் கட்ட தலைவர்கள் தவறாக வழிநடத்துகிறார்கள், திமுக கூட்டணியை விமர்சித்து விட்டு, கூசாமல் ஆதரவு கேட்பது சரியா என சிந்தனை செல்வன் குற்றம்சாட்டியுள்ளார். தமிழக சட்டப் பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் யாரும் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தவெக 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள நிலையில் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாததால் கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை கேட்டு வருகின்றனர். இதனிடையே, விசிக நேற்று மாலை கட்சியினருடன் ஆலோசனை நடத்தியது. இன்று தங்களது முடிவை அறிவிப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், விசிக முன்னாள் எம்எல்ஏ சிந்தனை செல்வன் நேற்று தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கொல்லைப்புறவழியாக கவர்னர் ஆட்சியை திணிக்க பாஜ முயற்சி செய்கிறது.

தமிழக மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். தேர்தலுக்கு பிந்தைய அசாதாரண சூழலை கையாளுவதில் விஜய் தடுமாறிப்போய் இருக்கிறாரா அல்லது அவருடன் இருக்கும் 2ம் கட்ட தலைவர்கள் அவரை தவறாக வழி நடத்துகிறார்களா என கேள்வி எழுகிறது. ஆட்சி அமைப்பதற்கான அறுதிப்பெரும்பான்மை தனக்கு கிடைக்காத சூழலில் மிக கவனமாக தவெக செயல்பட்டிருக்க வேண்டும். உடனே தான் ஆதரவு கோர விரும்பும் அரசியல் கட்சித்தலைவர்களை விஜய் நேரில் சந்தித்திருக்க வேண்டாமா?. இரண்டாம் கட்ட தலைவர்களின் பிடியில் தான் இல்லை என்பதையும், கவர்னர் வழியாக பாஜ தமிழகத்திற்குள் நுழைய முயற்சிப்பதை தடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் மனம்விட்டு கலந்துரையாடி இருக்க வேண்டாமா?. வாட்ஸ் ஆப்பில் ஆதரவு கேட்டு கடிதத்தை அனுப்பிவிட்டு பதில் சொல்லுங்கள் என்பதை எப்படி புரிந்து கொள்வது?. வெற்றிபெற்ற பின் தேர்தலுக்கு முந்தைய முரண்பாடுகளை கூர்தீட்டாமல், அனைத்து தலைவர்களின் நன்மதிப்பை பெரும் வகையில் பெருந்தன்மையாக கருத்துக்களை விஜய் கையாண்டிருக்க வேண்டும். ஆனால் வெற்றிச்செய்தி வந்த மறுக்கணமே மன்னராட்சிக்கு முடிவு கட்டப்பட்ட நாள் என ஆணவத்தையும், பழி வாங்கும் மனநிலையையும் வெளிப்படுத்தியது சரிதானா?.

மோதிலால் நேரு, ஜவகர்லால் நேரு, இந்திராகாந்தி, ராஜிவ்காந்தி, ராகுல்காந்தி என 5வது தலைமுறை வாரிசு அரசியலை சுமக்கும் காங்கிரசுடன் கை கோர்த்துக் கொண்டு வாரிசு அரசியலைப் பேசுவதை விட நகைமுரண் வேறேதும் இருக்க முடியுமா?. திமுகவை ஒழித்துக்கட்டப்பட்ட மன்னராட்சி என பேசிவிட்டு திமுக தலைமையில் கூட்டணி அமைத்து வெற்றி கண்டுள்ள இடதுசாரிகளையும், விசிகவையும் கூசாமல் ஆதரவு கேட்டு அழைப்பதில் என்னவகை தர்க்க நியாயம் உள்ளது?. விஜய் அவரின் கரிஷ்மா அடையாளத்தை, நாயக பிம்பத்தை பயன்படுத்திக்கொண்டு அவரை வெளியே வரவிடாமல் இளவரசராக்கி முடக்கி வைத்து விட்டு அவருடன் இருக்கும் 2ம் கட்ட தலைவர்களில் ஒரு சிலர் திமுகவின் மீதுள்ள பகையை தீர்த்துக்கொள்ள விஜய்யை பயன்படுத்துகிறார்கள். ஆட்சிக்கு வந்த மறு நிமிடமே திமுக, அதிமுக, தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள் என பிதற்றுவது ஆணவத்தின் உச்சமல்லவா. விசிக தலைவர் திருமாவுடன் 20 பேர் மட்டும் தான் இருக்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் எங்கள் ஆட்கள்தான்.

சிலீப்பர் செல்லாக அங்கே இருக்கிறார்கள் என பேசுயது என்னவகை அரசியல் அறம்?. அரசியல் புரிதலாலும் தனது அன்பாலும் தனது சட்டமன்ற உறுப்பினர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டிய விஜய், தமிழ்நாட்டில் மீண்டும் சட்டமன்ற உறுப்பினர்களை அடைத்து வைக்கும் ரிசார்ட் அரசியலை கொண்டு வந்திருப்பது ரசிக்கத்தகுந்ததல்ல. விஜய், தன்னுடன் இருப்பவர்களின் தவறான அணுகுமுறையும் தவறான வழிகாட்டலும் தான் தனக்கு ஆதரவு வந்து சேர்வதற்கான வழியை அடைத்து வைத்திருக்கிறது என்பதை உடனே உணர வேண்டும். ஜனநாயக நெறிமுறைகள் அனைத்தையும் மீறி கவர்னர் ஆட்சியை திணிக்க பாஜ முயன்று வரும் இந்த சூழலின் ஆபத்தை உணருவதும் அதை தடுத்து தமிழ்நாட்டை காப்பதுதான் மக்கள் முன்னால் உள்ள சவால். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதேபோல், விசிக முன்னாள் எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ், விஜய்க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்தநிலையில், சிந்தனைச் செல்வன் கடும் குற்றச்சாட்டுக்களை தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Related Stories: