சென்னை: தவெக அமைச்சரவையில் 2 இடங்கள், 1 மாநிலங்களவை உறுப்பினர் வேண்டும் என கேட்டு உள்ளோம். என்று செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தலில் பெரும்பான்மை பெற்ற கூட்டணியை ஆட்சியமைக்க ஆளுநர் உடனடியாக அழைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எங்கள் போராட்டத்திற்கும், கூட்டணித் தலைவர்களின் கோரிக்கைக்கும் செவிசாய்த்து, ஆளுநர் தற்போது தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க அழைக்க வேண்டும். ஆளுநரின் நடவடிக்கைகளில் பாஜவின் தலையீடு இருந்ததால் ஆட்சியமைப்பதில் இரண்டு நாட்கள் தாமதம் ஏற்பட்டது.
காங்கிரஸ் கட்சி கூட்டணிக் கட்சிகளின் முதுகில் குத்திவிட்டதாகக் திமுகவால் கூறப்படும் விமர்சனங்களில் எவ்வித உண்மையும் இல்லை. சிபிஐ, சிபிஎம் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகள் தங்களது கொள்கை மற்றும் தேச நலன் அடிப்படையில் முடிவுகளை எடுத்துள்ளன. அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம். இதில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வதுதான் கூட்டணிக்கான அறம். சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகள் நிபந்தனையற்ற வெளியிலிருந்து ஆதரவு தருவதாக அறிவித்துள்ளன.
தவெக அமைச்சரவை யில் காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர் பதவிகளும், 1 மாநிலங்களவை உறுப்பினர் பதவி வேண்டும் என தெரிவித்துள்ளோம். யார் அமைச்சரவையில் இடம் பெறுவார்கள் என்பது குறித்து கட்சியின் அகில இந்தியத் தலைமை மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ முடிவு அறிவிக்கப்படும். குதிரை பேரம் நடப்பதாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் வதந்தியே. ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுப்பது என்பது ஜனநாயகத்தின் அடிப்படைத் தத்துவமாகும். அந்த வகையில் கூட்டணிக் கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுப்பது வரவேற்கத்தக்கது.
ஜனநாயகத்தைப் பாதுகாக்க அறவழியில் போராடலாமே தவிர, இத்தகைய வன்முறைச் செயல்களில் ஈடுபடக் கூடாது. இதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்ற நிலை வரக்கூடாது. காவல்துறை உடனடியாகத் தலையிட்டு வன்முறையாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டணிக்குள் இந்தி திணிப்பு மற்றும் மும்மொழிக் கொள்கை குறித்த கேள்விகள் எழுகின்றன.
புதியதாக உருவாகியுள்ள அரசு, இந்தியைத் திணிக்கக் கூடாது என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. இந்தி கற்க விரும்புபவர்கள் கற்கலாம், ஆனால் அதை யார் மீதும் திணிக்கக் கூடாது. தமிழ்நாடு நீண்ட காலமாக இருமொழிக் கொள்கையையே பின்பற்றி வருகிறது, அதுவே தொடர வேண்டும். தற்போதைய இந்த அரசியல் கூட்டணி, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்கள் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் வெற்றிகரமாகத் தொடரும் என உறுதியாக நம்புகிறோம்.
இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.
