அணைக்கட்டு, ஜூன் 23: அணைக்கட்டு தாலுகாவில் நாளை ஜமாபந்தி நிறைவு பெறுவதையொட்டி 3 நாட்களில் 535 மனுக்கள் மீது அலுவலர்கள் விசாரணை நடத்தி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ஆய்வு செய்து வருகின்றனர். அணைக்கட்டு தாலுகாவில் கடந்த வாரம் 17ம் தேதி முதல் வருவாய் தீர்வாயம் எனும் ஜமாபந்தி தொடங்கி நடைபெற்று வருகிறது. புதன், வியாழன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் அணைக்கட்டு, ஊசூர், பள்ளிகொண்டா உள்வட்டதுக்குட்பட்ட கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெற்றது.
இதில் கலெக்டர் லீலா அலக்ஸ் தலைமை தாங்கி பொது மக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் பெரும்பாலும் பலர் இலவச வீட்டு மனை பட்டா மற்றும் ஆன்லைன் இணைய வழி பட்டா வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர். மேலும் சிலர் இடம் அளவீடு, ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், கோயில் இடத்திற்கு பட்டா வழங்குதல், பட்டா திருத்தம், மாற்றுத்திறனாளி நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர். தொடர்ந்து இன்று ஒடுக்கத்தூர் உள்வட்டத்திற்குட்பட்ட கிராமங்களுக்கு ஜமாபந்தியும் நாளை அகரம் உள்வட்டத்திலுள்ள கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைபெறுகிறது.
மாலையில் ஜமாபந்தியில் மனு கொடுத்தவர்கள் உள்பட தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. பயனாளிகளுக்கு கலெக்டர் லீலா அலக்ஸ் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அதன்படி 3 நாட்கள் நடந்து முடிந்த ஜமாபந்தியில் பெறப்பட்ட 535 மனுக்கள் மீது வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கும் ஆய்வு செய்து வருகின்றனர்.
கிராம வருவாய் கணக்குகளை தணிக்கை செய்து ஜமாபந்தியை நிறைவு செய்து தீர்வு ஏற்படுத்தப்பட்ட உண்மையான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் லீலா அலக்ஸ் வழங்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
