கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தல் நடைமுறைகள் நிறைவடைந்ததை அடுத்து, புதிய அரசு அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 15 ஆண்டுகளாக மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த சூழலில், அம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 294 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் ஒரு ெதாகுதியில் முறைகேடு நடந்ததால், அந்த தொகுதிக்கான மறுவாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே கடந்த 4ம் தேதி 293 தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதன்படி 207 இடங்களில் அபார வெற்றி பெற்ற பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நீண்டகால ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து ஆட்சியைக் கைப்பற்றியது. தேர்தல் முடிவுகள் வெளியாகி, மாநிலத்தின் புதிய அரசியல் சூழல் உருவானதை தொடர்ந்து, அங்கு புதிய அரசை அமைப்பதற்கான பல்வேறு கட்டப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் புதிய சட்டசபையை அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. அதில், தேர்தல் முடிவு தொடர்பான முறையான அறிவிப்பு மாநில கவர்னருக்கு முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘புதிய சட்டசபை அமைப்பதற்கான அரசியல் சட்ட ரீதியான பணிகள் தேர்தல் ஆணையத்தின் தரப்பில் முழுமையாக முடிவடைந்துள்ளன. வாக்குப்பதிவு முதல் வாக்கு எண்ணிக்கை வரை அனைத்து பணிகளும் நேர்மையான மற்றும் வெளிப்படையான முறையில் சட்ட விதிகளின்படி நடத்தப்பட்டன. இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதன் மூலம், புதியதாக தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பதவியேற்கவும், புதிய ஆட்சி அமையவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது’ என்று கூறினார். இதன் மூலம் புதிய அரசு பதவியேற்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் அங்கு தொடங்கியுள்ளன.
