*கலக்கத்தில் வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள்
திருச்சி : வணிக சிலண்டர்கள் விலை தொடர்ந்து விலை உயர்வால் உணவு பொருட்கள் விலை மேலும் உயரக்கூடும் அபாயம் அதிகரித்துள்ளது. அதேபோல ஆட்டோவிற்கு நிறப்பும் எரிவாயு விலையும் உயர்ந்துள்ளதால் ஆட்டோ டிரைவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
மேற்காசிய நாடுகளில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக ஈரான் நாடு கடல் வழியான ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது. இதனால் இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றி வரும் கப்பல்கள் நிறுத்தப்பட்டது.
இதன் எதிரொலியாக இந்தியாவில் வணிக காஸ் சிலிண்டர் தட்டுபாடு, விலையேறியது. அந்த வகையில் இம்மாதம் கச்சா எண்ணெய் விலை 1 பீப்பாய் 125 டாலர் வரை விலை உயர்ந்தது. இந்தியாவில் 19 கிலோ வணிக காஸ் சிலிண்டர் ரூ.2,500க்கு விற்பனையானது, கள்ள சந்தையில் தாறுமாறான விலையில் விற்கப்பட்டது. அதாவது ரூ.4 ஆயிரம் வரை விற்பனையானது. இதன் விளைவாக அனைத்து உணவகங்களிலும் உணவு பொருட்கள் விற்பனை அதிகரித்தது.
தமிழ்நாட்டிலும் வணிக காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு தலைவிரித்தாடியது. நடுத்தர வர்க்கத்தினர் தினசரி உண்ணும் உணவுகளின் விலையேற்றம் கடடுக்கடங்காமல் சென்றது. தமிழ்நாடு அரசு சார்பில் வணிக உணவு விற்பனை நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தில் மானியம் வழங்கப்பட்டது.
இதனால் ஏதோ நிலை சற்று கட்டுக்குள் இருந்தது. இம்மாதம் நேற்று தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வணிக காஸ் சிலிண்டர் விலை தாறுமாறாக விலை உயர்ந்தது.
அதாவது 19 கிலோ சிலண்டர் விலை ரூ.930 வரை உயர்ந்தது. இதனால் 19 கிலோ வணிக சிலிண்டர் விலை ரூ.3 ஆயிரத்து 200 வரை விற்பனையாகிறது. ஏற்கனவே பல ஹோட்டல்கள் சிலிண்டர் விலை உயர்வால் விறகடுப்பிற்கு மாறிவிட்டன. தற்போது இந்த கூடுதல் விலையேற்றம் சிறு வியாபாரிகளை கடுமையாக பாதிப்படைய செய்துள்ளது.
அதுமட்டுமின்றி உணவு பொருட்கள் மற்றும் டீ, காபி, பலகாரம் விலை உயர்வு என்ற விளைவை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்த விலையேற்றம் நடுத்தர வர்க்கத்தினரையும், வியாபாரிகளையும் பெரிதும் பாதிப்படைய செய்துள்ளது. சிறு வியாபாரிகள் இதனால் கடும் பாதிப்படைந்துள்ளனர்.
பல சிறிய உணவகங்கள் வணிக காஸ் சிலிண்டர் விலை உயர்வால் விறகு அடுப்பில் சமைக்க தொடங்கிவிட்டன. தற்போது விறகு விலையும் சற்று உயர்ந்துள்ளது. இதுகுறித்து திருச்சியை சேர்ந்த வியபாரி ஒருவர் கூறுகையில்,உணவு பொருட்கள் விலை உயர்த்த வேண்டும் என்பது எங்கள் நோக்கம் இல்லை. ஆனால் எகிறி வரும் வணிக சிலிண்டர் விலை எங்களை அந்த சூழ்நிலைக்கு தள்ளியுள்ளது என்றனர்.
இட்லி ரூ.10, தோசை ரூ.50, புரோட்டா ரூ.15, சப்பாத்தி ரூ.15 என்று விற்பனையாகிறது. சிக்கன் பிரியாணி விலை ரூ.150ஆக பல கடைகளில் விற்பனையானது. டீ ரூ.15, காபி. ரூ.25, பலகாரம் ரூ.10-12 வரை விலை உயர்ந்து விற்பனையாகிறது. தற்போது வணிக சிலிண்டர் விலை உயர்வு கூடுதல்விலை உயர்வு ஏற்படும் அபாயத்தை அதிகரித்துள்ளது.
ஆட்டோவிற்கு பயன்படுத்தப்படும் எரிவாயுவான சிஎன்ஜி விலை கிலோவிற்கு ரூ.3 உயர்ந்துள்ளதால் ஆட்டோ ஓட்டுனர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுகுறித்து ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் கூறுகையில், ரூ.3 உயர்வு என்பது எங்கள் தினசரி வாழ்வில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தும்.
ஏற்கனவே எரிவாயு தட்டுப்பாட்டால் வெகு நேரம் காத்திருந்து பெட்ரோல் பங்குகளில் ஆட்டோவிற்கு எரிவாயு நிரப்பி செல்கிறோம். இப்போது விலை உயர்வு வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சும் செயல் என்றாா்.
