நன்றி குங்குமம் தோழி
இன்றைய இளைஞர்கள் சமூக மாற்றத்திற்காக பல்வேறு வழிகளில் பங்களித்து வருகின்றனர். அந்த வரிசையில், தனது 19 வயதிலேயே சமூக சேவையில் தடம் பதித்து, இன்று பல
குழந்தைகளுக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறார் மோனிஷா. சமூக ஆர்வலர் மற்றும் உளவியல் ஆலோசகராகவும் பங்காற்றும் மோனிஷா ‘நாம் விதைக்கலாம்’ என்கிற தொண்டு அமைப்பின் மூலம் பல்வேறு சமூகப் பணிகளை ஆற்றி வருகிறார்.
“நான் சமூகப் பணியில் இளங்கலை மற்றும் முதுகலை (MSW-Medical & Psychiatric) படிப்புகளை முடித்திருக்கிறேன். என்னுடைய சமூக சேவை என்பது ஒரு எதிர்பாராத நிகழ்வின் மூலம் தொடங்கியது. கல்லூரி காலத்தில் என் தோழி ஒருவர் உணவை வீணடித்தபோது, அதற்காக அவளிடமிருந்து 63 ரூபாய் பணத்தை அபராதமாக பெற்றேன். அந்தப் பணத்தில் சாலையோரம் இருந்த முதியவர் ஒருவருக்கு உணவு மற்றும் பிஸ்கெட் வாங்கிக் கொடுத்தபோது எனக்கு கிடைத்த மனநிறைவு, என்னை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தியது. ‘நாம் விதைக்கலாம்’ என்கிற அறக்கட்டளை உருவாக இதுவே காரணமாக அமைந்தது. முதலில் ஐந்து பேருடன் தொடங்கிய செயல், பின்னர் நூற்றுக்கணக்கான மாணவர்களை ஒன்றிணைக்கும் ஓர் அமைப்பாக மாறியது.
நாங்கள் அமைப்பாக செயல்படும்போது புற்றுநோய் மற்றும் எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் தங்கி பணியாற்றிய அனுபவம் வாழ்க்கை மீதான என் பார்வையை மாற்றியது. வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது என்பதை அந்தக் குழந்தைகள் மூலம் உணர்ந்தேன். சமூகத்தில் என்னால் முடிந்த சேவைகளை செய்வதும், சிறு மாற்றங்களை ஏற்படுத்துவதுமே என் நோக்கமாக இருப்பதை உணர்ந்தேன். அமைப்பின் மூலம் தொடர்ந்து பல்வேறு சமூகத் திட்டங்களை முன்னெடுத்தேன். நான் கல்லூரி படிக்கும் சமயத்தில் பல மாணவர்கள் இணைந்து, சென்னையில் உள்ள ஜெமினி மேம்பால ஓவியத் திட்டத்தை நிறைவேற்றியது ஒரு நெகிழ்ச்சிகரமான தருணமாக அமைந்தது.
ஜெமினி மேம்பாலச் சுவர்களில் ஓவியங்கள் மூலம் சில மாற்றங்களை ஏற்படுத்தலாம் எனும் யோசனையில் அதற்காக மாணவர்களை திரட்ட முயற்சி செய்தேன். இந்தப் பணிகளை இரவு நேரத்தில்தான் செய்ய முடியும் என்பதால், மாணவர்கள் பலரும் தயக்கம் காட்டி பின்வாங்கினர். என்னால் இதை முன்னெடுத்து செய்ய முடியாது என்று சோர்வாக நின்றபோது, என் கல்லூரியின் உதவியுடன் மாணவர்களின் பெற்றோர்களிடம் கோரிக்கை வைத்ததும் இந்த சமூகப் பணியில் ஈடுபட சம்மதித்தனர்.
இவ்வாறு ஒரே நேரத்தில் 180 மாணவர்களை திரட்டி, ஜெமினி மேம்பாலத்தின் சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த தேவையில்லாத போஸ்டர்களை அகற்றி, அவற்றில் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து முடித்தோம். மாணவர்கள் மட்டுமின்றி குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என அனைவரும் அவர்களுடன் துணைக்கு வந்து அவர்களை ஊக்குவித்தனர். அனைவரும் ஒன்றுபட்டு ஜெமினி மேம்பாலத்தை விழிப்புணர்வு ஓவியங்களால் அலங்கரித்த இந்த நிகழ்வு பெரிதாக எதையோ சாதித்தது போன்ற மனநிறைவை கொடுத்தது. இதுபோல கொரோனா கால லாக்டவுன் சமயத்தில் மாணவர் அமைப்பை ஒருங்கிணைத்து, உணவுத் தேவை மற்றும் மீட்புப் பணிகளில் இறங்கிப் பணியாற்றினோம்.
2020 ஆம் ஆண்டில் இந்த சமயத்தில்தான் கல்லூரி காலத்தில் தொடங்கிய அமைப்பினை ‘நாம் விதைக்கலாம்’ எனும் அறக்கட்டளையாக முறைப்படி பதிவு செய்தேன். இதில் முழுவதும் தன்னார்வலர்களே முன்வந்து எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி சமூகப் பணிகளில் ஈடுபடுகின்றனர். ஜவஹர் மற்றும் நிவேதிதா போன்ற தன்னார்வலர்கள் நாம் விதைக்கலாம் அறக்கட்டளைக்கு பெரிதும் உழைத்திருக்கின்றனர். மேலும் பலரின் உதவிகளால் அறக்கட்டளை இயங்கி வருகிறது” எனும் மோனிஷா, சமூக ஆர்வலராக மட்டுமின்றி உளவியல் ஆலோசகராகவும் தன்னை வெளிப்படுத்துகிறார்.
“முதுகலை படிப்பை முடித்த பிறகு, ஒரு நிறுவனத்தில் மாதம் 60,000 ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்தது. ஆனால், அந்த வாழ்க்கையில் எனக்கு அவ்வளவு ஈடுபாடு இல்லை. குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். நம் குழந்தைகள் ஒவ்வொருவரும் ஆரோக்கியமான சமுதாயத்தில் வளர வேண்டும், அவர்களும் அதன் உருவாக்கத்தில் பங்கெடுக்க வேண்டும். எனவே குழந்தைகளுக்குப் பயனுள்ள வகையில் ஏதேனும் செய்ய வேண்டும் எனும் நோக்கில் Tiny teddies எனும் பிளே ஸ்கூல் ஒன்றை ஆரம்பித்தேன்.
இங்கு மாண்டிசோரி முறையில் பாடங்களை கற்பிப்பது மட்டுமின்றி சிறு வேலைகள், செயல்பாடுகள் மூலம் கற்றல், விலங்குகளைக் கையாள்வது போன்ற வாழ்க்கைத்திறன் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து குழந்தைகளுக்குக் கற்பித்து வருகிறோம். நாம் விதைக்கலாம் அறக்கட்டளை மூலம் தற்போது பல முக்கியத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
‘தடம்’ என்ற செயல்திட்டத்தின் மூலம் பள்ளிக்கரணை மற்றும் வண்ணாரப்பேட்டை பகுதிகளில் உள்ள குடிசைவாழ் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி மையங்களை நடத்தி வருகிறோம். அதே போல குடிசைப் பகுதிகளில் வாழும் பெண்களுக்கு ‘பெண்கள் தொழில்முனைவோர் திட்டம்’ மூலம் சோப்பு, மெழுகுவர்த்தி போன்ற பொருட்களை தயார் செய்வதற்கான பயிற்சி அளித்து, அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவுகிறோம். பசியால் வாடும் சாலையோர மக்களுக்கு அவ்வப்போது உணவு வழங்கும் சேவையும் செய்து வருகிறோம்.
இளங்கலை படிப்பிற்கு பின்னர் நான் முடித்த பிராக்டிசிங் கவுன்சிலிங் என்கிற டிப்ளமோ படிப்பின் மூலம் உளவியல் ஆலோசகராக பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது. குறிப்பாகக் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதிர்ச்சிகளில் இருந்து அவர்கள் மீண்டு வர உளவியல் ஆலோசனைகள் மூலம் உதவி வருகிறேன். ஒருமுறை அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்ட குழந்தையின் வழக்கில் ஆதாரங்கள் இல்லாததால் குற்றவாளியை தண்டிக்க முடியாமல் போனது.
அதிலிருந்து தகுந்த ஆதாரங்களுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க என்னால் முடிந்தளவு போராடுகிறேன். வழக்கமாக வியாசர்பாடி பகுதியில் குழந்தை பாதுகாப்பு இல்லங்களுக்கு சென்று குழந்தைகளுக்கு உணவு, உடை வழங்க சென்றிருந்தபோது, ஒரு இல்லத்தில் உரிமையாளரால் குழந்தைகள் வன்கொடுமை செய்யப்படுவதை குழந்தைகளே எங்களிடம் தெரிவித்தனர்.
பின்னர் சைல்டுலைன் சேவை உதவியுடன் உரிய ஆதாரங்கள் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கையில் அந்நபரை கைது செய்து அதிகாரிகள் அந்த பாதுகாப்பு இல்லத்தை மூடினார்கள். அந்த சமயத்தில் குழந்தைகளை மீட்டு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தது, எங்களின் முக்கிய பங்காக கருதுகிறோம். ஒரு உளவியல் ஆலோசகராக பொதுமக்கள் தங்கள் மனநலத்தை பேணுதல் வேண்டும் எனும் நோக்கில், அவ்வப்போது மனநலம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன்.
இதே போல பெசன்ட் நகரில் நடைபெற்ற தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் மற்றும் சுற்றியுள்ளோரின் மனநலத்தை பேணிக்காப்போம் என கைகோர்த்து உறுதிமொழி எடுத்த நிகழ்வு, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இளைஞர்கள் சமூகப் பணிகளில் ஈடுபட முன்வர வேண்டும். என் குழந்தை மற்றும் அடுத்த தலைமுறையினர் ஒரு பாதுகாப்பான சமுதாயத்தில் வளர வேண்டும் என்பதையே என் இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறேன். பணத்திற்காக வேலை செய்வதை விட, மனதிற்குப் பிடித்த சமூகப் பணியில் ஈடுபடுவதே எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என்கிறார் மோனிஷா.
தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்
