குழந்தைகளை கவரும் இன்ட்ராக்டிவ் தமிழ் புத்தகங்கள்!

நன்றி குங்குமம் தோழி

இன்றைய டிஜிட்டல் சூழலில் குழந்தை மேம்பாடு மற்றும் தாய்மொழி கற்பித்தல் என்பது பெற்றோர்களுக்கு பெரிய சவாலாக உள்ளது. குழந்தைகளின் செல்ஃபோன் பயன்பாட்டால் பெரும்பாலான நேரம் செல்ஃபோன் திரையிலேயே (Screen time) முடிந்து விடுகிறது. அதனால் குழந்தைகள், தங்கள் குடும்பத்தார் மற்றும் வெளியில் விளையாடுதல் போன்ற அழகான பால்ய காலத்தை தொலைத்து விடுகின்றனர். சமூக ஊடகங்களான யூ டியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் உலா வரும் ரீல்ஸ் வீடியோக்களால் சின்னஞ்சிறு குழந்தைகள் கூட வயதுக்கு மீறிய பேச்சிலும் செயலிலும் ஈடுபடுகின்றனர். நேரடி சமூகத் தொடர்பு குறைந்துவிட்டது.

மேலும் கண் பார்வை பாதிப்பதோடு ஒழுக்கமும் கெடுவதைக் கண்கூடாக பார்க்க முடிகிறது. ஆன்லைன் கலாச்சாரம் மற்றும் இக்கால கல்விமுறையின் தாக்கத்தால் குழந்தைகளிடையே கல்வி சார்ந்த பதற்றமும் மனக்குழப்பமும் ஏற்படுகிறது. பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகளின் கவனச்சிதறலை சரி செய்ய புதுப்புது முயற்சிகளை செய்து கொண்டிருக்கின்றனர். இன்றைய ஹைடெக் சந்ததியினரின் மனதினை கல்வி பக்கம் திசை திருப்ப மாற்று வழியைத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர்.

‘‘எங்களிடம் மாற்று வழி இருக்கிறது’’ என்று மார் தட்டுகிறார்கள் ‘அகன் அதிகாரம்’ பதிப்பகத்தின் உரிமையாளரான ரம்யா மற்றும் சேதுராம் தம்பதியினர். இவர்கள் புத்தக வாசிப்புதான் அதற்கு சிறந்த வழி என்கிறார்கள். அதை உறுதி செய்யும் விதமாக குழந்தைகளுக்கான ‘இன்ட்ராக்டிவ்’ புத்தகங்களை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிட்டு குழந்தைகளிடம் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கின்றனர்.

‘‘எனக்கு வேலூர் மாவட்டம், நெமிலி தான் சொந்த ஊர். பொறியியல் பட்டப்படிப்பு முடித்துவிட்டு நான் படித்த கல்லூரியிலேயே துணைப் பேராசிரியராக வேலை பார்த்து வந்தேன். பிறகு ஒரு ஆட்டோ மொபைல் தனியார் கம்பெனியில் டிசைனராக பத்து வருடம் வேலை செய்தேன். என் கணவரும் பொறியியல் பட்டதாரி. அவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். இப்போது பிரசுரத்தை அவர்தான் பார்த்துக் கொள்கிறார்.

எனக்கு குழந்தை பிறந்த பிறகு விடுமுறைக்கு பிறகு மீண்டும் வேலைக்கு போக ஆரம்பித்தேன். மாமியார், மாமனார் பராமரிப்பில் குழந்தை வளர்ந்தாலும் நாங்க குழந்தைக்கு மொபைல் ஸ்கிரீன் பழக்கம் செய்யக்கூடாது என்று மிகவும் உறுதியாக இருந்தோம். அவனுக்கு படிக்க கார்ட்டூன் புத்தகங்களை வாங்கிக் கொடுத்தோம். என் பையன் மூன்று மாதக் குழந்தையாக இருக்கும் போதே புத்தகங்களை பார்த்து தான் வளர்ந்தான். ஆனால், நான் வாங்கிய கார்ட்டூன் புத்தகங்கள் எல்லாம் ஆங்கிலத்தில் இருந்தன. வீட்டில் உள்ள பெரியவர்களால் அந்தப் புத்தகத்தைப் பார்த்து கதை சொல்ல முடியவில்லை. தமிழ் புத்தகங்கள் வாங்கித் தர சொல்லி கேட்டார்கள்.

ஆனால், சந்தையில் கிடைத்த தமிழ் புத்தகங்கள் ஆங்கில கதை புத்தகங்கள் போல் குழந்தைகளை கவரும் வகையில் இன்ட்ராக்டிவாக இல்லை. அப்போதுதான் என் கணவர் நம்முடைய குழந்தைக்காக ஆங்கில புத்தகங்களை போல் தமிழிலும் உருவாக்கலாம் என்றார். அவர் நன்றாக வரைவார். பாட்டி வடை சுட்ட கதையை கார்ட்டூன் வடிவத்தில் விளையாட்டு புத்தகமாக அமைத்தார்.

பார்க்க அழகாக, புதுசாக இருந்தது. என் மகனுக்கு மிகவும் பிடித்துப் போனது. அப்போது என் மகனிடம் ‘வடை எங்கணு கேட்க? அவன் ‘வடை போச்சு’ என்றான். அவனின் மழலை மாறா பேச்சில் வந்த அந்த வார்த்தைகளையே புத்தகத்தின் தலைப்பாக மாற்றினோம்’’ என்றவர், 2022ல் தெற்கு ஆசியாவின் சிறந்த போர்டு புக் விருதும், தமிழின் முதல் இன்ட்ராக்டிவ் குழந்தைகள் புத்தகத்திற்கான விருதும் ‘வடை போச்சு’ புத்தகத்திற்காக பெற்றுள்ளார்.

‘‘குழந்தைகளுக்கு மூன்று மாதமானதும், கருப்பு வெள்ளை நிற படங்கள் கொண்ட புத்தகங்களை காட்டினால் புரிந்துகொள்வார்கள். ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் அவர்களுக்கு நிறங்கள் தெரிய துவங்கும். நாங்கள் புத்தகங்களை தயாரிக்க வேண்டும் என்று முடிவெடுத்த உடனே குழந்தைகள் பற்றியும் அவர்களின் மனநலம், கண் பார்வை, சந்தையில் கிடைக்கும் புத்தகங்கள் என பல ஆய்வுகளில் ஈடுபட்டோம்.

அதன் அடிப்படையில் 2022ல் ‘அகன் அதிகாரம்’ உருவானது. என் கணவரும் நானும் எங்கள் ஐடியாக்களை இலஸ்ட்ரேட்டர்களிடம் சொல்வோம். அவர்கள் எங்கள் விருப்பத்திற்கேற்ப அனிமேஷன்களுடன் கூடிய புத்தகங்களை டிசைன் செய்து தருவார்கள். பிறகு பிரின்டிங் செய்வோம். அந்தப் புத்தகத்தில் இன்ட்ராக்டிவ் செயல்பாடுகளுக்கேற்ப மாற்றி அமைப்போம். இதுவரை தமிழில் ஒன்பது புத்தகங்களை வெளியிட்டுள்ளோம். தமிழில் வெளியிட்ட ‘வெந்து தணிந்தது கோபம்’ என்ற ஒரு புத்தகத்தை மட்டும் ஆங்கிலத்திலும் வெளியிட்டு இருக்கிறோம்.

இந்தியா மற்றும் வெளிநாடுகளான மலேசியா, சிங்கப்பூர், ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் எங்கள் வெளியீட்டை வாங்கி தங்கள் குழந்தைகளுக்கு உங்களால்தான் தமிழ் மொழி கற்பிக்க முடிகிறது என்று சொல்லும் போது, ஒரு அம்மாவாக அவர்கள் மகிழ்ச்சியை உணர்கிறேன். அந்நாடுகளுக்கு ஷிப்பிங் செலவு அதிகம் என்பதால் அங்குள்ள மறு விற்பனையாளர்களுக்கு நாங்க மொத்தமாக டெலிவரி செய்திடுவோம். அவர்கள் அங்கு லோக்கலில் ஆர்டர் செய்தவர்களுக்கு அனுப்பி விடுவார்கள். இந்த பிசினஸால் பல வெளிநாட்டு தமிழ் குடும்பத்தலைவிகளும் தொழில்முனைவோர்களாக உருவாகியிருக்கிறார்கள்’’ என்றார் பூரிப்பாக.

‘‘ரம்யாவை தொடர்ந்து சேதுராம் பேசும் போது, ‘‘நாங்க உருவாக்கும் ஒவ்வொரு புத்தகமும் எங்கள் மகனை போன்றே எல்லா குழந்தைகளையும் மனதில் வைத்தே பார்த்து பார்த்து உருவாக்குகிறோம். இந்தக் கால குழந்தைகள் ஹைப்பர் ஆக்டிவாக இருக்கிறார்கள். அவர்களின் மனநிலை அடிக்கடி மாறக்கூடியது. அதற்கேற்றபடி அவர்களின் விருப்பமானவற்றை புத்தக வடிவமாக கொடுக்கும் போது அவர்களுக்கும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுகிறது.

எங்கள் தமிழ் புத்தகங்களில் ‘ஐ’ என்ற தமிழ் புத்தகத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகைத் திணைப் பற்றி கூறியுள்ளோம். எனக்கும் என் மனைவிக்கும் தமிழார்வம் அதிகம். புத்தகங்களின் எல்லா பெயர்களும் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்பதால் சங்கத்தமிழ் இலக்கிய வார்த்தைகளை வைத்தே பெயர் வைத்துள்ளோம். எங்கள் புத்தகங்களை 0-8 வயது வரை உள்ள குழந்தைகள் பயன்படுத்தலாம். கிண்டர் கார்டன் பள்ளிகளிலும் எங்கள் புத்தகங்களைக் கற்பிக்கிறார்கள்.

சின்னஞ்சிறு குழந்தைகள் படிப்பதால் எளிதில் கிழிந்து விடாமல் தண்ணீர் பட்டால் சிதையாமல் இருப்பது போல் வடிவமைத்திருக்கிறோம். தரத்தில் நாங்கள் காம்ப்ரமைஸ் செய்வதில்லை. சென்னை ஹிக்கின்பாதம்ஸிலும் முதன்முதலில் வெளியிட்ட போர்டு புத்தகம் எங்களுடையதுதான்’’ என்றவர், செங்கல்பட்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பரிசுப் பொருளாக இவரின் புத்தகங்களை கொடுத்துள்ளார்.

‘‘விரைவில் 90’ஸ் கிட்ஸ் பயன்படுத்திய வாய்ப்பாடு போன்ற புத்தகம் ஒன்றை வடிவமைக்க திட்டமிட்டிருக்கிறோம். அந்தப் புத்தகம் எல்லா குழந்தைகளின் கைகளிலும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறோம். இன்றைய தாய்மார்களின் பெரிய பிரச்சனை தங்கள் குழந்தைகள் மொபைல்போனுக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்பதுதான். அதற்கு மாற்றாக எங்க புத்தகம் இருக்கும்’’ என்கிறார்கள் ரம்யா-சேதுராம் தம்பதியினர்.

தொகுப்பு: கலைச்செல்வி 

 

 

Related Stories: