நெடிய கதை சொல்லும் நெட்டிக்கலை பொருட்கள்!

நன்றி குங்குமம் தோழி

இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை வாழ்ந்த தமிழர்கள் பூமியில் எதையும் விட்டு வைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். நாம் மண்ணாக, மரமாக, தாவரமாக பார்ப்பதையெல்லாம் நம் மூதாதையர் கலையாகத்தான் பார்த்திருக்கிறார்கள். அதனால்தான் களிமண்ணை கலைப்பொருளாகவும் கல்லையும் மரத்தையும் சிற்பங்களாகவும் மாற்றியுள்ளனர். தமிழர்களின் கையில் மந்திர கோல் இருந்திருக்குமோ? என்று என்னுமளவிற்கும் கைவினைப் பொருட்களின் பிறப்பிடம் தமிழ்நாடுதான் என்று சொல்லுமளவிற்கும் இருந்திருக்கிறது நம் தமிழர்களின் கைத்திறன்.

தமிழ்நாட்டின் கலைத்திறனும் பாரம்பரியமும் எப்பொழுதும் எங்களுக்கே சொந்தம் என்பது போல் சாயாமல் நிற்கும் தலையாட்டி பொம்மைகளோடு உயர்ந்து நிற்கிறது கலைகளின் நகரமான தஞ்சை. அந்நகரத்திற்கு தலையாட்டி பொம்மைகளை போலவே நெட்டிக்கலை என்ற கைவினை கலைப்பொருட்களுக்கும் புவிசார் குறியீடு இருக்கிறது என்பது பலரும் அறியாத கதை.
‘‘நெட்டி என்பது ஒரு வகை நீர் தாவரம். அத்தாவரத்தின் தண்டின் மூலம் பல கைவினை கலைப்பொருட்களை நாங்கள் 45 வருடங்களாக பரம்பரையாக செய்து கொண்டிருக்கிறோம்’’ என்று நெட்டிக்கலை பற்றிய நீண்டதொரு விளக்கத்தைத் தருகின்றனர் தஞ்சாவூர் நெட்டிக்கலை வல்லுநர்களும் ‘கோகுல் பித் வொர்க்ஸ்’ நிறுவனர்களுமான ராதா எழில்விழி தம்பதியினர்.

‘‘நெட்டி என்பது பச்சை நிறத்தில் ஏரி, குளங்களில் அதாவது, ஓடாத நீர் பகுதிகளில், மனிதர்கள் கால் படாத சதுப்பு நிலங்களில் தாமரையுடன் சேர்ந்து வளரக்கூடிய செடி. தஞ்சாவூர் பகுதிகளில் அதிகம் வளரும். ராஜமுந்திரி, கொல்கத்தா போன்ற பகுதிகளிலும் இவை விளையும் என்பதால், அங்கிருந்தும் நாங்க வாங்குகிறோம். ராஜமுந்திரியில் இருந்து கிடைக்கும் நெட்டியில் குல்லாக்கள் செய்கின்றனர். கொல்கத்தாவில் காளி திருவிழாவின் போது, நெட்டியில்தான் காளி உருவங்கள் செய்வார்கள்.

இந்த தாவரம் சிறியதாக நெல்லி இலை போல இருக்கும். 3 அடி முதல் வளரும். நெட்டி டிசம்பர் முதல் மே மாதங்கள் வரை கிடைக்கும். நீர் நிலைகளில் நீர் வற்றிய பின் பறிக்கலாம். நீர் இருக்கும் போது அதனை கையாளத் தெரிந்தவர் மட்டுமே பறிக்க முடியும். அதனைச் சுற்றி அட்டைப் பூச்சிகள் இருக்கும். அதனை பறித்து வெயிலில் உலர்த்தி பதப்படுத்தி விற்பார்கள். நெட்டியின் மிருதுவான எடை குறைந்த தன்மையால் நாம் விரும்பும் வடிவங்களில் சிறிய முதல் பெரியது வரை லேசான நுணுக்கமான வேலைப்பாட்டுடன் கூடிய பொம்மைகளை செய்யலாம். இதுவரை கணக்கில்லாத கலைப் பொருட்களை நானும் என் மனைவி எழில்விழியும் செய்துள்ளோம். தற்போது என் மருமகள்களும் எங்களுடன் இணைந்து நாங்க குடும்பமாக இந்த கைவினையில் ஈடுபட்டு வருகிறோம்’’ என்கிறார் ராதா.

‘‘நான் பி.எஸ்.சி படிச்சிட்டு BSNLல் அலுவலராக பணிபுரிந்து வந்தேன். என் ஓய்வு நேரங்களில் இந்த நெட்டிக் கலைப்பொருட்களை செய்வேன். என்னைப் பார்த்து என் மனைவி எழில்விழியும் செய்ய ஆரம்பிச்சாங்க. இரவு நேர பணி இருக்கும் போது, பகலில் கைவினைப் பொருட்கள் செய்வது வழக்கம். அதை எங்க அலுவலகத்திற்கு வருகை தரும் அரசியல் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர், அரசு அலுவலர்களுக்கு பரிசாக தருவார்கள். முன்னாள், இந்நாள் முதலமைச்சர்களுக்கும் எங்கள் கைவினைப் பொருட்களை பரிசாக கொடுத்த போது அவர்கள் பாராட்டியும் உள்ளனர். தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் என் கலைத்திறனைப் பாராட்டி ‘வாழ்நாள் பொக்கிஷம்’ என்ற விருதை அளித்தது எனக்கு பெரிய கௌரவத்தையும் அங்கீகாரத்தையும் தந்திருக்கிறது’’ என்று நெகிழ்கிறார் ராதா.

‘‘என் மகனும் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில் சிற்பங்களை நெட்டியில் செய்தார். அதற்கு அவருக்கு அரசு விருது அளித்து பாராட்டியது. தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு வாய்ந்த கோயில்கள், தாஜ்மஹால், முக்கிய கோட்டைகள், ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் கோபுரம் என பலவற்றை நெட்டியில் செய்துள்ளோம். நெட்டிக்கலைக்கு புவிசார் குறியீடு கிடைக்க பல ஆண்டுகள் போராடினோம். கொல்கத்தாவிலும் நெட்டிக் கலை இருப்பதால் யாருக்கு தருவது என்ற குழப்பம் தேர்வுக் குழுவினருக்கு இருந்தது. நானும் என் மனைவியும் செய்த கிருஷ்ணன் கடவுள் உருவச் சிலையை பார்த்தவர்கள் தஞ்சாவூர் நெட்டிக்கலைக்கே புவிசார் குறியீடு அளித்தது மறக்க முடியாத நிகழ்வாகும்’’ என்றவரை தொடர்ந்தார் அவரின் மனைவி எழில்விழி.

‘‘தஞ்சை மாவட்டத்தில் வழக்கமாக மாட்டுப் பொங்கலன்று நெட்டியில்தான் மாடுகளுக்கு மாலைகள் செய்து கொண்டாடுவாங்க. பிற்காலத்தில் வந்த தலைமுறையினர் அதனை கட்டடங்கள், பூக்கள், தெய்வ, மனித உருவங்களாக மாற்றினர். தஞ்சையில் பல குடும்பங்கள் இந்த நெட்டியில் கைவினைப் பொருட்கள் செய்து வந்தார்கள். அதே போல் எங்கள் முன்னோர்களும் செய்து வந்தனர். இதை நாங்கள் செய்யத் தொடங்கி அதன் மூலம் புதுப்புது உருவங்களை வடிவமைத்தோம்.

நெட்டிப் பொருட்களின் சிறப்பே கண்ணாடி பேழைக்குள் வைத்தால் காலத்திற்குள் அழியாமல் அப்படியே இருக்கும். தூசி படாமல் வைத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் நிறம் மங்கி பொலிவிழந்துவிடும். நாங்கள் செய்த கலைப்பொருட்கள் இன்றளவும் எல்லா மாவட்ட அருங்காட்சியகத்திலும் வைக்கப்பட்டுள்ளன. என் கணவர் தொடங்கிய இந்த நெட்டிக் கலைத் தொழில் பயணம் தற்போது என் குடும்பத்தில் அடுத்த தலைமுறையினரும் தொடர்கிறார்கள்’’ என்றார் பெருமிதமாக.

‘‘நாங்க வடிவமைப்பதை தமிழ்நாடு அரசின் பூம்புகார் கைத்தொழில் வளர்ச்சிக் கழகத்திற்கு விற்பனைக்கு அனுப்புகிறோம். மேலும், தமிழ்நாடு அரசு ‘நான் முதல்வன் திட்டம்’ மூலம் அளிக்கும் தொழில் பயிற்சிகளில் நெட்டிக்கலை பயிற்சியும் ஒன்று. அதன் அடிப்படையில் நாங்க எங்க மாவட்டத்தில் பயிற்சி அளித்து வருகிறோம். தினமும் மதிய உணவு, சிற்றுண்டி, சான்றிதழுடன் மாதம் 12,500 ரூபாய் உதவித் தொகையும் அரசு சார்பில் இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக வளாகம் மற்றும் எங்களின் இடத்திலும் நாங்க பயிற்சி அளிக்கிறோம். குடும்பத் தலைவிகள், இளைஞர்கள், மாணவர்கள் என பலரும் இதனை கற்றுக்கொள்ள முன்வருகிறார்கள்.

பயிற்சிக்கு பிறகு தொழில் தொடங்க அரசு சார்பில் உதவிகள் செய்யப்படுகின்றன. நெட்டிக் கலையை பொறுத்தவரை பெரிதாக மூலதனம் தேவைப்படாது. நெட்டி, கத்தி, சாணைக்கல் இருந்தால் போதும். அதன் மூலம் பல அழகிய உருவங்களை செதுக்கலாம். அரசு கைவினைத் தொழிலை மேம்படுத்த உதவிகள் செய்தாலும் வங்கிகள் எல்லாவற்றிற்கும் உத்தரவாத கையெழுத்து கேட்பது வருத்தமளிக்கிறது’’ என்கிறார் எழில்விழி.

‘‘தமிழ்நாட்டில் பெரும்பாலும் எல்லா கோயில்களின் மாதிரிகளையும் நெட்டியில் செய்துள்ளோம். யாரும் போக முடியாத சில கோயில்களின் உச்சிகளுக்குக்கூட சென்று பார்த்தும் அதன் மாதிரியையும் உருவாக்கி இருக்கிறோம். அரசு விழாக்களுக்காக பரிசளிக்க செய்து தரச் சொல்லி கேட்பார்கள். அந்த சமயம் இரவெல்லாம் கண் விழித்து செய்து கொடுத்திருக்கிறோம். எவ்வளவு கடினமான சூழலிலும் வடிவங்கள் முழுமை பெறும் போது ஏற்படும் மனத்திருப்திக்கும் மகிழ்ச்சிக்கும் அளவே கிடையாது. எங்களுக்கு பிறகும் எங்கள் கைவண்ணம் எங்கள் பெருமைகளை பேசும் என்பதில் சந்தேகமில்லை’’ என்றவர், தற்போதைய தமிழ்நாடு தேர்தலுக்காக 100% வாக்கு என்ற அடிப்படையில் தஞ்சாவூர் தலையாட்டி ராஜா, ராணி பொம்மைகளை நெட்டியில் வடிவமைத்துள்ளார்.

‘‘தோண்ட தோண்ட பொக்கிஷம் என்பது போல தமிழர் பாரம்பரியத்தையும் வரலாற்றையும் புரட்டி பார்த்தால் தெரியும். இன்றைய நவீன வாழ்க்கை தமிழர்களின் வாழ்வியலை தலைகீழாக மாற்றியுள்ளதை நினைக்கும் போது வருத்தமாக உள்ளது. செல்ஃபோன் மோகத்திலும் அந்நிய நாடுகளின் பிளாஸ்டிக் பொருட்களையும் எலக்ட்ரானிக் பொருட்களை மட்டுமே பார்த்துக் கொண்டு அதன் புகழ் பாடும் இன்றைய தலைமுறையினருக்கு நெட்டிக்கலை பயிற்சி தந்து, இந்தக் கலையை பாதுகாக்க வேண்டும் என்பதிலேயே எங்கள் நாட்கள் நகர்கின்றன’’ என்கின்றனர் கலை வல்லுநர்களும் லட்சிய தம்பதிகளுமான ராதா, எழில்விழி.

தொகுப்பு: கலைச்செல்வி

Related Stories: