அர்த்தமுள்ள வாழ்க்கை!

நன்றி குங்குமம் தோழி

தூக்கம் கலைந்து படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்தாள் பேபி. நிற்க முடியாமல் தடுமாறிய கால்களுக்கு வேலை கொடுக்காமல் அப்படியே படுக்கையில் சாய்ந்தாள். கைகளை அழுத்தி தேய்த்து சூடான உள்ளங்கைகளை கண்களின் மீது வைத்து இரவெல்லாம் சரியாக தூங்காமல் எரிந்த கண்களுக்கு இதமான சூட்டைக் கொடுத்தாள்.

காய்ச்சல் வந்ததாலோ என்னவோ கை, கால் உடலெல்லாம் வலித்தது. தைலத்தை தடவி காலை நீவிவிட்டுக் கொண்டாள். லேசான விக்ஸ் வாசனை இதமாக இருந்தது. அவளுக்குப் பிடித்த வாசனை. தலைவலி இல்லை என்றாலும் தைலத்தை தடவி கண்களுக்கு மிதமாய் எரிச்சலூட்டும் விக்ஸ் வாசனையை அனுபவிப்பாள்.சமையலறையில் பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டது. சுடச்சுட வெஜிடபிள் பிரியாணி, காலிஃபிளவர் சில்லி என மதிய சமையல் ரெடியாகி இருந்தது.

குளியலறையில் வெங்கட் தும்பிக் கொண்டே குளிக்கும் சத்தம் கேட்டது. சூடான தண்ணீரில் குளித்தாலும் ஒரு மக் தண்ணீரை தலைக்கு ஊற்றினால் கூட ஓயாமல் தும்பத் தொடங்குவான். சைனஸ் ப்ராப்ளம். இருந்தாலும் தினசரி தலையோடு குளிக்கும் பழக்கம் மாறவில்லை.சுற்றி யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, தலையணைக்கு அடியில் ஒளித்து வைத்திருந்த செல்போனை எடுத்து நம்பரை தட்டி விட்டு, செல்லை காதுக்கு கொடுத்தாள். உதடுகளில் புன்னகை தவழ்ந்தது. ‘‘ஹலோ!’’ என்றாள் மெல்லியக் குரலில்.‘‘காய்ச்சல் இப்ப பரவாயில்லையா? மூணு நாளைக்கு ஒருமுறை ஹாஸ்பிட்டலுக்கு ஓட வேண்டியதா இருக்கு?’’ என்றபடி வந்தான் வெங்கட்.

செல்போன் பழைய படி தலையணைக்கு அடியில் சென்றது.‘‘கூலிங் வாட்டர குடிக்கக்கூடாதுன்னு சொன்னா கேட்டாத் தான? இப்ப பாருங்க மூணு நாளைக்கு ஸ்கூல் லீவ். சரியாகற வரைக்கும் என்னாலயும் எங்கயும் போக முடியாது. ஒருத்தரால எத்தனை பேருக்குப் பிரச்னை.’’‘‘தாகமா இருக்குதேன்னு ஒரு ஆசைக்குத் தான் எடுத்துக் குடிச்சேன். இனி குடிக்க மாட்டம்மா’’ என்றாள் மெதுவாக.‘‘இந்தப் பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல’’ என்றான் வெங்கட் கோவமாக.

‘‘இப்படி சொல்ல வேண்டியது. அப்புறம் வாரத்துக்கு ஒருமுறை காய்ச்சல்ல படுத்துட வேண்டியது.’’ ‘‘அதான் சொல்லியாச்சு இல்ல… திரும்பத் திரும்ப அதப் பத்தியே பேசாத’’ என்றான் எரிச்சலோடு. ‘‘உங்களுக்கென்ன சொல்லிட்டுக் கிளம்பிடுவீங்க… வேலைக்கு லீவ் போட்டுட்டு வீட்ல உட்காந்து நான்தான கவனிக்க வேண்டியதா இருக்கு… சொல்லிக் கேட்கலன்னா இனி ஃப்ரிட்ஜ்ல தண்ணி வெக்காத’’ என்றான் வெங்கட் கத்தலாக.‘‘என்கிட்ட சொல்லி என்னப் பண்றது? என் பேச்ச இந்த வீட்ல யார் கேட்கறாங்க?’’ சுபா பதிலுக்கு கத்தினாள்.

‘‘சரி கத்தாம போய் சாப்பாட எடுத்து வை… எனக்கு நேரமாகுது. உங்க பஞ்சாயத்த தீர்க்க இப்ப எனக்கு நேரமில்ல…’’ அவசரமாய் சாப்பிட்டு விட்டு வேலைக்கு கிளம்பினான்.
பேபி கண்களை மூடிக் கொண்டாள். அடிக்கும் வெயிலுக்கு வாய் குளிர்ச்சியான தண்ணீரை மட்டுமே கேட்டது. யாருக்கும் தெரியாமல் ஆசைக்கு அள்ளிக்கு குடித்து சளிக், காய்ச்சல் என்று தானும் கஷ்டப்பட்டு தன் குடும்பத்தையும் சங்கடத்தில் தள்ளியது தவறுதான் புரிந்தது.

மறுபடியும் ஒருமுறை எச்சரித்து விட்டுக் கிளம்பினான் வெங்கட்.‘‘நான் கடை வரைக்கும் போய்ட்டு வந்துடறேன்… சாப்பாட எடுத்து வெச்சுட்டுப் போறேன்… நான் வர்றதுக்கு சாயங்காலம் ஆகும். கதவ உள்தாழ் போட்டுட்டு பாதுகாப்பா இருக்கணும். புரிஞ்சதா… யார் வந்தாலும் கதவ திறக்கக் கூடாது. ஏதாவது பிரச்னைன்னா உடனே என் நம்பருக்கு போன் பண்ணணும் மறந்துடக் கூடாது…’’ கோவத்தோடு எச்சரித்து விட்டுக் கிளம்பினாள். சுபா அரசுப் பள்ளியின் ஆசிரியை.

பணம், நகை இருக்கும் அறைக் கதவை பூட்டி விட்டுத்தான் வந்தாள். பண விஷயத்தில் யாரையும் அவள் நம்புவதாக இல்லை. ரூம் கதவ எதுக்குப் பூட்டணும் என்று வினவிய கணவனிடம்.
‘‘ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு பெத்து… கண்ணுக்குள்ள வெச்சு பாதுகாத்து வளர்க்கற. உங்க அப்பா, அம்மா மாதிரி ஆறுப்புள்ளைய பெத்து ஒவ்வொருத்தர் வீட்லயும் ராஜ வாழ்க்கை வாழற குடுப்பினை எனக்கில்ல… சேர்த்து வெச்சத, யார நம்பியும் தொலைக்க நான் தயாரா இல்ல’’ என்றாள் உறுதியாக.

வீட்டில் யாருமில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு செல்போனை கையிலெடுத்தால் பேபி. ‘‘ஹலோ செல்வி வீட்ல யாருமில்லையா?’’ ‘‘இல்ல… இப்பதான் ரெண்டு பேரும் வெளியப் போனாங்க?’’ ‘‘எப்பயும் சந்திக்கிற கோயில் கிட்ட வந்துடு.’’ ‘‘சரிங்க!’’ அவசரமாய் குட்டி டிபன் பாக்ஸில் தனக்காக எடுத்து வைத்திருந்த வெஜ் பிரியாணியை நிரப்பினாள். சில்லியை ஒரு டப்பாவிற்குள் எடுத்து வைத்துக் கொண்டாள். அவசரமாய் குளித்து முடித்து விட்டு அசோக்கிற்கு பிடித்த ஊதா கலர் காட்டன் டிரெஸ்ஸில் தயாரானாள். ஹேண்ட் பேக்கில் டிபன் பாக்ஸை எடுத்துக் கொண்டு வீட்டை பூட்டி விட்டுக் கிளம்பினாள்.

‘‘பேபி ஆட்டோலயா வந்த? ரொம்ப இளைச்ச மாதிரி தெரியுது. காய்ச்சலா…’’ தொட்டுப் பார்த்தான்.‘‘அத விடுங்க… இப்ப எல்லாம் சரி ஆய்டுச்சு. நீங்க ரொம்ப நேரமா காத்துட்டு இருக்கீங்களா? எல்லோரும் வெளிய போனப் பின்னாடி கிளம்புனேன். யாருக்கும் தெரியாம வர்றதுக்கு இவ்வளவு நேரமாச்சு’’ என்றாள் கவலையோடு.‘‘பரவால்லம்மா… உனக்காக எவ்வளவு நேரம் வேணா நான் காத்திருப்பேன்’’ என்றான் பிரியத்தோடு.‘‘உங்களுக்காக நான் என்ன கொண்டு வந்திருக்கேன் பாருங்க… வெஜிடபிள் பிரியாணி, சில்லி. நான் சாப்ட்டேன். இது உங்களுக்குத்தான்…’’ அசோக் மெல்ல சிரித்தான். தன் கையிலிருந்த சின்ன பாக்ஸை செல்வியிடம் கொடுத்தான்.

அதே போல் பிரியாணி, சில்லி. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இருவரின் கண்களும் கலங்கின. ‘‘காலைல சுபா வந்தப்ப குடுத்துட்டுப் போனது?’’ பேபி கண்ணீர் வழிய அசோக்கின் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டாள்.‘‘இந்த வயசுல நமக்கு துணை தேவையில்லைன்னு நம்மள கேட்காம அவங்களே முடிவு பண்ணிட்டாங்க. ஆனா, நாமதான் அவங்களுக்கே தெரியாம ரகசியமா சந்திச்சிக்கிறோமே?’’ அசோக் சிரித்தான்.

‘‘அங்கப் பாருடா… ரெண்டுப் பெருசுங்க இந்த வயசுல ஒன்னுக்கொன்னு ஊட்டி விட்டுக்குதுங்க…’’ அந்த இளவட்டக் கும்பல் சிாித்தது.வயதான காலத்தில் பிள்ளைகள் வீட்டில் பிரித்து வைத்து கவனித்துக் கொள்ளப்படும் அந்த தம்பதிகள், தன் கண்ணீர் கதையை பகிர்ந்து கொண்டனர்.

தொகுப்பு: சுதாராணி

Related Stories: