பாரம்பரிய அம்ரிட்சர் மற்றும் பஞ்சாபி உணவிற்காகவே இயங்கும் கிளவுட் கிச்சன்!

நன்றி குங்குமம் தோழி

‘‘எனக்கு சமைக்க தெரியாது. என் மாமியார் மற்றும் கணவர் இருவரும் கொடுத்த ஊக்கம் தான் இன்று ஒரு கிளவுட் கிச்சனை அமைத்து நிர்வகித்து வருகிறேன்’’ என்கிறார் தீபா. சென்னையை சேர்ந்த இவர் தரமணியில் ‘த கிச்சன் பை செஃப் தீபா’ என்ற பெயரில் கிளவுட் கிச்சன் ஒன்றை அமைத்து கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமில்லாமல் உணவு டெலிவரி ஆப் மூலமாகவும் உணவினை வழங்கி வருகிறார். ‘‘கோவிட் போதுதான் நான் இதை செயல்படுத்தவே ஆரம்பித்தேன். அந்த நேரத்தில் எல்லா கடைகளும் மூடப்பட்டிருந்தது. யாரும் வெளியே வேலைக்கு செல்ல முடியவில்லை. என் மாமியார் நல்லா சமைப்பாங்க.

என் கணவர் செஃப் என்பதால், அவர் ஓட்டலில் சமைக்கும் உணவினை எனக்கு படம் பிடித்து வந்து காண்பிப்பார். அதைப் பார்க்கும் போது எனக்கும் சமைக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும். ஆனால், எங்க வீட்டில் சமையலுக்கு ஆள் இருந்ததால் எனக்கு சமையல் செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. கோவிட் போது வெளியாட்கள் யாரையும் வீட்டிற்குள் அனுமதிக்கக் கூடாதுன்னு சொன்னதால், சமையல் செய்பவரால் வரமுடியவில்லை. அப்போது என் கணவர் மற்றும் மாமியார் இருவரின் உதவியுடன் நான் சமைக்க ஆரம்பித்தேன். நாங்க பஞ்சாபி என்பதால் என் மாமியாரிடம் இருந்து அனைத்து பாரம்பரிய உணவினையும் அதே பாரம்பரிய ஸ்டைலில் எவ்வாறு சமைக்கலாம் என்று கற்றுக் கொண்டேன்’’ என்றவர், கிளவுட் கிச்சன் ஆரம்பித்தது குறித்து பகிர்ந்தார்.

‘‘கோவிட் என்பதால் முதலில் வீட்டில் இருந்தபடியே நான் எங்க சொசைட்டியில் உள்ளவர்களுக்கு சமைத்துக் கொடுத்தேன். அதன் பிறகு என் கணவர்தான் இதை ஒரு கிளவுட் கிச்சனாக மாற்றலாம் என்று ஐடியா கொடுத்தார். முதலில் வேளச்சேரியில்தான் கிளவுட் கிச்சன் ஆரம்பிச்சோம். இதற்காக செஃப்களையும் நியமித்தோம். அவர்கள் அனைவரும் ஓய்வு பெற்ற சமையல் நிபுணர்கள். அவர்களுக்கு என்னுடைய ஸ்டைல் உணவினை டிரெயின் செய்தேன்.

உணவு ஆப்கள் மூலம் எங்க உணவினை மக்களுக்கு வழங்க ஆரம்பித்தோம். முழுக்க முழுக்க பாரம்பரிய சைவ பஞ்சாபி உணவு என்பதால் பலரும் என்னுடைய உணவினை மிகவும் விரும்பி வாங்க ஆரம்பித்தார்கள். இரண்டு வருடம் சக்சஸாக நடத்தினோம். ஆனால், திடீரென்று என் உடல் நிலை காரணமாக என்னால் தொடர்ந்து நடத்த முடியவில்லை. மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இப்போது மீண்டும் புதிய உற்சாகத்துடன் நான் என்னுடைய கிளவுட் கிச்சனை தரமணியில் துவங்கி இருக்கிறேன். முன்பு எவ்வாறு செயல்பட்டோமோ அதேபோல்தான் இன்றும் உணவு ஆப் மூலமாக உணவினை வழங்கி வருகிறோம். என்னிடம் முன்பு வேலை பார்த்தவர்கள் எனக்காக காத்திருந்து இப்போது மீண்டும் என்னுடன் இணைந்துள்ளார்கள். நான் உடல்நிலை பாதிப்பில் இருந்த போது, பலர் என்னைத் தொடர்பு கொண்டு ஏன் மூடிவிட்டீர்கள் என்று கேட்டார்கள். காரணம், பலருக்கு என்னுடைய உணவு பிடித்திருந்தது’’ என்றவர், அம்ரிட்சர் மற்றும் பஞ்சாப் உணவினை மட்டுமே வழங்கி வருகிறார்.

‘‘திருமணத்திற்கு முன்பு வரை நானும் என் கணவர் போல் ஓட்டல் துறையில் தான் வேலை பார்த்து வந்தேன். அவர் செஃப், நான் விருந்தினர் தொடர்பு துறையில் இருந்தேன். கிச்சனுக்கும் எனக்கும் எந்தவிதத்திலும் தொடர்பு இருக்காது. அவர் சமைத்து அதை பிளேடிங் செய்வதை பார்க்க எனக்குப் பிடிக்கும். அதைப் பார்த்துதான் சமையல் மேல் எனக்கு விருப்பம் ஏற்பட்டது. நாங்க பெரும்பாலும் கடுகு எண்ணெய் மற்றும் நெய்தான் சமையலுக்கு பயன்படுத்துவோம்.

வட இந்திய உணவுகள் இருந்தாலும் பாரம்பரிய சுவையில் கிடைப்பதில்லை. அந்த சுவை மற்றும் தரம் மாறாமல் கொடுக்க விரும்பினேன். ஜெயின் உணவினையும் நாங்க வழங்கி வருகிறோம். அவங்க மண்ணுக்கு கீழ் விளையும் எந்த காய்கறிகளையும் சாப்பிட மாட்டார்கள். அதனால் அவர்களுக்காகவே கஸ்டமைஸ் செய்து தருகிறோம்’’ என்றவர், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் உணவினை வழங்கி வருகிறார்.

‘‘எங்களின் கிச்சனில் சுமார் 500 பேருக்கு எளிதாக சமையல் செய்ய முடியும். சாதாரண மக்களுக்கு மட்டுமில்லாமல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தினமும் உணவு கொடுக்க முடிவு செய்தோம். அவர்களுக்கு மதிய உணவினை ஒரு முழு உணவாக ரூ.350, ரூ.450, ரூ.650 என மூன்றாக பிரித்திருக்கிறோம். ரூ.350க்கு இரண்டு கிரேவி, இரண்டு டிரை சப்ஜி மற்றும் ரொட்டி, சாதம் இருக்கும். 450 ரூபாய் பேக்கில் இவை அனைத்துடன் ஒரு பானம் மற்றும் டெசர்ட் வரும்.

ரூ. 650க்கு எக்ஸ்ட்ரா கபாப் பிளேட்டர்கள் வரும். இதில் எது வேண்டுமென்றாலும் அவர்களின் தேவைக்கு ஏற்ப ஆர்டர் கொடுக்கலாம். இந்த உணவு வாரத்திற்கு ஒருமுறை மாற்றம் செய்யப்படும். அதாவது, ஒருநாள் தால்மக்கானி இருந்தால் அடுத்த முறை பனீர் மசாலா இருக்கும். மாற்றம் செய்து தரும் போது, வாடிக்கையாளர்களுக்கு ஒரே உணவினை சாப்பிடுகிறோம் என்ற எண்ணம் ஏற்படாது.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமில்லாமல் சின்னச் சின்ன விழாக்கள், கார்ப்பரேட் நிகழ்வுகள் என ஆர்டரின் பேரில் உணவுகளை வழங்கி வருகிறோம். காரணம், ஒரு நாளைக்கு இவ்வளவு உணவு என்ற கணக்கில்தான் நாங்க தயார் செய்வோம். அன்றைய உணவினை அன்று தான் தயார் செய்வதால், பல்க் ஆர்டர்கள் மட்டும் முன்கூட்டியே தெரிவித்தால் தடையில்லாமல் எளிதில் கொடுக்க முடியும். மேலும் தனிப்பட்ட ஒரு நபர் எங்களின் உணவினை உணவு ஆப் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம். எங்களின் சக்சஸுக்கு முக்கிய காரணமே உணவினை ஃப்ரெஷ்ஷாக டெலிவரி செய்வதுதான். சொல்லப்போனால் உருளைக்கிழங்கு கட்லெட்டின் வடிவம் கொஞ்சம் மாறினாலும் அதை நாங்க பரிமாற மாட்டோம்’’ என்றவர், சில உணவுப் பொருட்களை அம்ரிட்சரில் இருந்து வரவழைக்கிறார்.

‘‘இங்கு அனைத்து மசாலாக்கள் கிடைக்கிறது. ஆனால், அதே பாரம்பரிய சுவையினை எங்களால் கொடுக்க முடியவில்லை. அதனால் சோளமாவு, பாப்பட், கடுகு இலை மற்றும் காஷ்மீரி மிளகாய் போன்ற சில மசாலாக்களை அங்கிருந்து வரவழைக்கிறோம். உணவு ஆப்கள் மூலம் வழங்கி வந்தாலும் சுமார் பத்து கிலோ மீட்டர் தூரம்தான் வழங்க முடிகிறது. அதனால் சென்னையில் மேலும் சில இடங்களில் எங்களின் கிளவுட் கிச்சன்களை அமைக்க திட்டமிட்டு இருக்கிறோம். அதேபோல் கார்ப்பரேட் நிகழ்வுகளில் லைவ் கிச்சன் மற்றும் சாட் உணவுகளையும் அளிக்க இருக்கிறோம்.

நான் முதலில் கிச்சனை அமைத்த போது சில வாடிக்கையாளர்கள் இங்கு நேரடியாக வந்து சாப்பிட விரும்புவார்கள். அவர்களுக்காக தனிப்பட்ட முறையில் உணவினை வழங்கி வந்தோம். அதேபோல் தற்போதும் கிச்சனில் ஒரு பகுதியினை அமைக்க திட்டமிட்டு இருக்கிறோம். இதன் மூலம் குடும்பமாக வந்து சூடாக உணவினை சாப்பிட்டு மகிழலாம்’’ என்றார் செஃப் தீபா.

தொகுப்பு: ரிதி

Related Stories: