நன்றி குங்குமம் தோழி
சினிமா எனும் மாயையில் சிக்கி இளைஞர் பட்டாளம் தறிகெட்டு நடப்பதையும், பெண்கள் வரைமுறையற்று பேசுவதையும் ஊடகங்கள் வெளிச்சமிடும் நிலையில், நமது சமகாலத்திலேயே இப்படி ஒரு தலைமுறை எப்படி உருவானது என்கிற கேள்விகளோடு, அதன் ஆணிவேர் குறித்து அறிய, பெண்ணிய சிந்தனையாளரும் சமூக திறனாய்வாளருமான ஓவியா அவர்களைச் சந்தித்ததில்…
‘‘தர்க்க ரீதியாய் கேள்வி கேட்கத் தெரிந்த முந்தைய தலைமுறை மறைந்து வரும் சூழலில், கேள்வியே கேட்கத் தெரியாத, சினிமா பிம்பங்களை மட்டுமே நம்பும் புதிய தலை
முறையிடம் சமூகம் ஒப்படைக்கப்படும்போது ஜனநாயகம் என்னவாகும் என்ற அச்சம் இயல்பாய் எழுகிறது. இந்த மங்கலான எக்ஸ்ரே திரையைத் துடைத்து உண்மையை உணர வேண்டியது காலத்தின் கட்டாயம்.நீண்ட காலமாய் ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சி மேல் அதிருப்தி ஏற்படுவது இயற்கைதான். அதிருப்தி இருப்பதில் தவறில்லை. ஆனால், அதற்கான மாற்றை நாம் எப்படி தேடுகிறோம் என்பதில்தான் பிரச்னையே இருக்கிறது. இதை விளக்க விவேகானந்தரின் மிகச் சிறந்த மேற்கோள் ஒன்று உள்ளது. “எனக்கு பருகுவதற்கு அமுத நீர் கிடைக்கவில்லை என்பதற்காக நாம் சாக்கடையை குடிக்க முடியாது…” எவ்வளவு ஆழமான வரிகள் இவை.
பலருக்கும் இன்று தர்க்கம் சார்ந்த மன பயிற்சி இல்லை. அரசியலை கொள்கை ரீதியான பிணைப்பாகப் பார்க்காமல், தங்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காகவும், குறுகிய நோக்கங்களுக்காகவும் அணுகத் தொடங்கியுள்ளனர். முந்தைய தலைமுறை சிந்தனை என்ற வண்டியின் இன்ஜினை ஆஃப் செய்துட்டு அமைதியாக உட்கார்ந்ததன் விளைவு, இன்றைய இளைஞர்கள் எந்தப் பாதையும் இன்றி, வண்டியின் சக்கரத்தை மட்டுமே காற்றில் வேகமாய் சுழற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.
சக்கரம் சுற்றுது, பெருஞ்சத்தம் கேக்குது, புழுதி பறக்குது, ஆனால், சமூகம் என்கிற வண்டி ஒரு அங்குலம் கூட முன்னால் நகரல. வண்டி ஏன் நகரல என்கிற காரணத்தை புரிஞ்சுக்க 40 வருஷத்துக்குப் பின்னால் போக வேண்டியிருக்கு.அன்றைய காலகட்டத்தில், 20 வயது இளைஞனிடம் இயல்பாகவே சமூக உணர்வு இருந்தது. கட்சி அரசியல் குறித்து அவனுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். வலதுசாரி, இடதுசாரிங்கிற சித்தாந்தங்கள் புரியாமல் இருந்திருக்கலாம். ஆனால், சமூகம் குறித்த அக்கறை இருந்தது. நான் வாழும் இந்த சமுதாயத்துக்கும் எனக்கும் என்ன தொடர்பு இருக்கு? அரசாங்கம் எடுக்கும் ஒரு முடிவு என் தெருவுல எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துங்கிற அடிப்படை புரிதல் இருந்தது.
இன்றைக்கு அந்த உள்ளார்ந்த சமூக அரசியல் புரிதல் முற்றிலுமாக அழிந்துவிட்டது. மனிதர்களின் அன்றாட வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றமே இதன் ஆணிவேர். 30 ஆண்டுகளுக்கு முன்புவரை மனிதர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்ந்தனர். தன் வீட்டுக்கு தண்ணி பிடிக்க தெருக்குழாய்க்கு அவர்கள் போகணும். பொருட்கள் வாங்க கடைவீதிக்கு போகணும். மனிதனின் அன்றாட வாழ்வின் இந்த வெளிப்புற வாழ்க்கை தவிர்க்க முடியாததாய் இருந்ததால், அக்கம் பக்கத்து நபர்களோடு உரையாடுவது நிகழ்ந்தது.
யோசித்துப் பார்த்தால், கடந்த ஒரு மாதத்தில் எத்தனை முறை நீங்கள் அண்டை வீட்டாரோடு நிதானமாய் பேசி இருப்பீர்கள்? எத்தனை முறை அமேசான், ஸ்விக்கி, ஜெப்டோ மூலமாக பொருட்களை வாசலுக்கு வரவைத்தீர்கள்? மனிதனின் பெரும்பாலான தேவைகள், இன்றைக்கு வீட்டுக்குள்ளேயே முடிந்துவிடுகிறது. இதைத்தான் அதீத தனிமனிதவாத வாழ்க்கை முறை எனச் சொல்கிறோம்.
முன்பெல்லாம் 8 வயது குழந்தைக்கு தானாகவே சமூகம்னா என்னவெனப் புரியும். ஏனெனில், அந்தக் குழந்தை வீட்டை தாண்டி வெளியே மனிதர்களோடு புழங்கியது. பல்வேறு தரப்பட்ட மனிதர்களின் உணர்ச்சிகளை நேரில் பார்த்தது. இன்றைக்கு தெரு மற்றும் அண்டை அயலார் என்கிற அமைப்பிலிருந்து அந்நியப்பட்டு, சமூகம் என்பது கண்ணுக்குத் தெரியாத ஒன்றாய் மாறிவிட்டது. மேலும், சிறு பத்திரிகைகள், சிறிய அளவிலான கருத்தரங்கங்கள், தெருமுனை கூட்டங்கள் மாதிரியான முளைவிடும் அறிவுசார் முன்னெடுப்புகள் எல்லாம், காவல் துறையின் அனுமதி என்கிற பெயரில் முடக்கப்படுகிறது.
இன்று வாட்ஸாப் குரூப்பிலும், ஃபேஸ்புக்கிலும், எக்ஸ் தளத்திலும் ஆயிரக்கணக்கான நபர்களோடு அரசியல் விவாதம் செய்துகொண்டே இருக்கிறோம். தொழில்நுட்பம் நம்மை உலகளாவிய அளவில் இணைச்சிருக்குதான். இணையத்தில் இருப்பதாலேயே, சமூகமா இணைஞ்சிட்டோம் என்று நினைப்பது மாயை. இது ஒரு எக்கோ சேம்பர். நேருக்கு நேர் நடக்கும் உரையாடலே மனிதனிடம் தர்க்க ரீதியான சிந்தனையையும் சகிப்புத் தன்மையையும் வளர்க்கும்.
பொதுவெளிகள் சுருங்கியதால், மனிதர்கள் இன்று கொள்கைக்காகவோ, பொதுப் பிரச்னைகளுக்காகவோ கூடுவது அபூர்வமாய் மாற, இந்தப் பாதிப்பு அரசியல் களத்திலும் எதிரொலிக்கிறது. சமூக வாழ்க்கையில் அந்நியப்பட்ட மனிதர்கள் அரசியலை கொள்கை ரீதியாய் பார்ப்பதை நிறுத்திவிட்டனர்.தமிழ்நாட்டில் அறிஞர் அண்ணா மற்றும் சோமசுந்தர பாரதியார் மாதிரி முற்றிலும் முரண்பட்ட கருத்துக்களை கொண்ட தலைவர்கள் ஒரே மேடையில ஏறி தர்க்க ரீதியாக விவாதித்தார்கள். அது ஆரோக்கியமான விவாதமாய் இருந்தது. மக்களும் அதை கேட்டு சிந்திச்சு முடிவெடுத்தார்கள்.
இன்றைய விவாதங்கள், நபர்களை மையப்படுத்திய பர்சனாலிட்டி சென்ட்ரிக்காக மாறி, தனிநபர் தாக்குதலாக சுருங்கிவிட்டது. அரசியல் கட்சிகள் மக்களை அறிவுமயப்படுத்தி, தங்கள் வசப்படுத்த வேண்டும் என்று நினைப்பதில்லை. மாறாக கவர்ச்சிகரமான திட்டங்களையே நம்புகிறார்கள்.இரண்டு விஷயங்களை நாம் இங்கே தெளிவாய் பிரிச்சுப் பார்க்கணும். ஒன்னு நலத்திட்டங்கள். மற்றொன்று இலவசங்கள். ஒரு சமூகம் முன்னேற கல்வி, மருத்துவம், பேருந்து பயணம் மாதிரியான அடிப்படை வசதிகளை அரசாங்கம் இலவசமாய் வழங்குவது கடமை. இதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், நேரடியாய் வழங்கப்படும் பணம், பொருட்கள் போன்றவை உழைப்பின்றி இலவசமாய் கிடைப்பது..?
இதனை எப்படி செயல்படுத்துவீங்க? நிதி எங்கிருந்து வருகிறது? இதனால் பொருளாதாரம் எப்படி பாதிக்கப்படும்? எனக் கேள்வி கேட்கும் லாஜிக்கல் நாலேட்ஜை, இந்த நுகர்வு பொருட்கள் அழிப்பதுடன், ஒரு கட்சி தரும் வாக்குறுதிகள், அறிவிக்கும் திட்டங்கள் மீதான விமர்சனங்களே இன்றி, விசுவாசம் கட்டமைக்கப்பட்டு, கேள்வி கேட்கும் திறனை மழுங்கடித்து, உளவியல் ரீதியான அடிமைத்தனத்தை உருவாக்குகிறது.
இன்றைய கல்வி அமைப்பும் பண்பட்ட சமுதாயத்தை உருவாக்குவதை நோக்கமாய் கொள்ளாமல், அதிக மதிப்பெண்களை எடுக்கும் எந்திரங்களை உருவாக்கி வெளிநாட்டிற்கு படிக்கவும், வேலைக்கு அனுப்புவதையும் சாதனையாய் நினைக்கிறது. இந்த பந்தயத்தில் பின்தங்கும் மாணவர்களுக்கு வரலாற்று அறிவோ, சமூக அறிவியலோ கற்பிக்கப்படுவதில்லை. வேலை வாய்ப்பின்றி இவர்கள் தெருவில் நிற்க, குறைந்த சம்பளத்துக்கான வேலையையும் வெளிமாநிலத்தவர்கள் நிரப்புகின்றனர்.
மாணவர்கள் அனைவருமே படிக்கிறார்கள். ஆனால், அவர்களின் கல்விக்கேற்ற எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது. சாதனையாளர்களுக்கு போடுகிற மாலைகளில் காட்டப்படும் அக்கறையை, உயர்கல்வி படித்துவிட்டு உணவு பாக்கெட்டுகளை தூக்கிக்கொண்டு டெலிவரிக்கு செல்லுகிற இளைஞர்களிடம் காட்டுவதிலலை.
சொந்த மண்ணில் நாங்கள் ஏமாற்றப்படுகிறோம். எங்களுக்கு அதிகாரமும் இல்லை, வேலைவாய்ப்பும் இல்லை என்கிற விரக்தி இந்த இளைஞர்களை ஆட்கொள்கிறது. இதற்கான விடைதான் சினிமா என்கிற மாயை. திரையரங்குகளில் அவர்களின் ஆவேசத்தை நாயக பிம்பத்தின் வழியாகக் கொட்ட வைக்கிறது. இங்குதான் நாம் ஏமாறுகிறோம். ஒரு மாபெரும் கூட்டம் திறழ்வதாலே, அது தன்னிச்சையானது, அரசியல் விழிப்புணர்வு கொண்டதென அர்த்தமாகிடாது. மனித உளவியலில் என்ன நடக்குதென முதலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
அண்ணல் அம்பேத்கர் முன்வைத்த ‘போலச் செய்தல்’ என்கிற உளவியல் தத்துவத்தை இங்கே பொருத்திப் பார்த்தால், கூட்டத்தில் நாலுபேர் ஒன்றைச் செய்தால், மற்றவர்களும் அவர்களை பார்த்து அப்படியே செய்வார்கள். ஒரு பெரும் கூட்டத்தில் இருக்கும் போது தங்களின் சொந்த தர்க்க அறிவை நிறுத்திவிட்டு, கூட்டத்தில் பரவும் உணர்ச்சியை பிரதிபலிப்பவர்களாக மாறுவார்கள்.
நிஜ வாழ்க்கையில் தனக்கு கிடைக்காத அதிகாரத்தை, பிடித்த நடிகர் திரையில் வெளிப்படுத்துவதன் மூலம் தாங்களும் அடைந்ததாக நினைத்து திருப்தி அடைகிறார்கள். இது ஒருவகை உளவியல் போதை. பெண்கள் சிலரும் நடிகருக்காக பேசிய வசனங்களும் வைரலானது. ஊடகங்கள் அதை பெண்ணியத்தின் வீழ்ச்சி என எழுதித் தீர்த்தன.ஒரு நடிகரை எந்தக் கேள்வியும் இன்றி, தலைவனாய் ஏற்று, அவருக்காக கட்டற்ற வார்த்தைகளை பேசுவது வக்கரமான மனநிலையின் வெளிப்பாடு மட்டுமே. பெண்கள் பேசிய அந்த வார்த்தைகளை உற்று நோக்கினால், ஆழமான பிற்போக்குத்தனமும், ஆணாதிக்க சமுதாயத்தை ஆதரிக்கும் மனநிலையும் புதைந்திருப்பது தெரியும்.
இது தனிப்பட்ட ஒரு நபருக்கோ, ஒரு அரசியல் கட்சிக்கோ எதிரான பிரச்னையில்லை. இது ஒன்றோடொன்று பின்னி பிணைந்த சங்கிலித் தொடர். ஒன்றின் வீழ்ச்சி மற்றொன்றின் வீழ்ச்சிக்கு தானாகவே வழியமைத்து கொடுக்கும். வெற்றிடத்தை காற்று நிரப்பும்.அதாவது, தர்க்க ரீதியாக சிந்திக்கும் திறனை ஒரு சமூகம் இழக்கும் போது அது ஜனநாயகத்தோட அடித்தளத்தை அசைத்துப் பார்க்கும். இதை நாம் உணர்ந்து செயல்படாவிட்டால் எதிர்வரும் காலங்களில் இதன் விளைவுகள் கடுமையாகவே இருக்கும்.
செய்தி: மகேஸ்வரி நாகராஜன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
