கூடங்குளம் 3வது அணு உலையில் நீர் கசிவு சோதனை: விரைவில் உற்பத்தி தொடங்கும் என தகவல்

நெல்லை: கூடங்குளம் 3வது அணு உலையில் நீர் கசிவு சோதனை நேற்று நடத்தப்பட்டது. அப்போது பாதுகாப்பு வால்வுகள், உபகரணங்கள் சோதிக்கப்பட்டன. நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் இந்தியா-ரஷ்யா கூட்டு முயற்சியுடன் தலா ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் மூலம் 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி நடந்து வருகிறது. இந்நிலையில் ரூபாய் 29 ஆயிரம் கோடியில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட மேலும் 2 அணு உலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதில் 3வது அணு உலை அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இதையடுத்து அணு உலையில் நீர் நிரப்பி நீர் கசிவு சோதனை நேற்று நடத்தப்பட்டது. இது 3வது அணு உலையின் வடிவமைப்பில் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. இந்த நீர் கசிவு சோதனையின் போது பாதுகாப்பு வால்வுகள், மென் நீர் மூலம் அணு உலையை குளிர்விக்கும் உபகரணங்கள் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை அணு உலையின் மூலம் மின் உற்பத்தியை தொடங்குவதற்கு முன்பாக நடத்தப்படும் முக்கிய சோதனையாகும்.

இந்த சோதனை குறித்து இந்திய அணு சக்தி கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அணு உலை அமைப்பதற்கு முன்பாக அதன் தொடக்க நிலையில் உபகரணங்கள் சோதனை மற்றும் அணு உலையை குளிர்விக்கும் பைப் லைன் சோதனை ஆகியவை முக்கிய சோதனையாக கருதப்படுகிறது. இந்த சோதனை கூடங்குளத்தில் நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. கூடங்குளம் 4வது அணு உலையின் கட்டுமான பணிகளும் விரைவாக நடந்து வருகின்றன. இது தவிர 5, 6 அணு உலைகளும் தலா ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இந்த அணு உலைகள் ஒன்றன்பின் ஒன்றாக இயங்க தொடங்கும். இந்த 6 அணு உலைகளும் கூடங்குளம் அணு உலை வளாகத்தில் இயங்க தொடங்கும் போது இங்கு 6,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: