கேரளத்தில் 12 மாவட்டங்களுக்கு வெயில் எச்சரிக்கை

 

திருவனந்தபுரம்: கேரளத்தில் இடுக்கி, வயநாடு ஆகிய 2 மாவட்டங்கள் தவிர ஏனைய 12 மாவட்டங்களுக்கும் நாளை வரை வெயில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் வழக்கத்தை விட இந்த வருடம் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் பாலக்காடு, கண்ணூர், கோழிக்கோடு உள்பட பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கடந்த சில தினங்களாக திருவனந்தபுரம், எர்ணாகுளம் உள்பட சில மாவட்டங்களில் கோடை மழை பெய்கின்ற போதிலும் வெப்பநிலை குறையவில்லை.
இதற்கிடையே கடந்த 2 மாதங்களாக கேரளத்தில் வெப்பநிலை சராசரியை விட 2 முதல் 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகமாக உள்ளது.

இந்தநிலையில் நாளை வரை இடுக்கி, வயநாடு தவிர மற்ற 12 மாவட்டங்களுக்கும் வானிலை ஆய்வு மையம் வெயில் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாலக்காடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெப்பநிலை 40 டிகிரி செல்சியசை தாண்டி கொளுத்தி வருகிறது. நாளை வரை இந்த மாவட்டத்தில் இதே நிலை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொல்லத்தில் 39 டிகிரி செல்ஷியசும், கோட்டயத்தில் 38 டிகிரி செல்ஷியசும், ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், திருவனந்தபுரம் உள்பட 8 மாவட்டங்களில் 37 டிகிரி செல்ஷியஸ் ஆகவும், திருவனந்தபுரத்தில் 36 டிகிரி செல்ஷியஸ் வரையும் வெப்பநிலை உயரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

Related Stories: