மேற்குவங்கத்தில் 11 மணிக்கு 41.11% ஓட்டுப்பதிவு; இயந்திர கோளாறால் மக்கள் அவதி

 

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு 152 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் இன்று தொடங்கியது. மேற்கு வங்க சட்டசபைக்கு 152 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். காலை 11 மணி நிலவரப்படி, மேற்கண்ட தொகுதிகளில் சராசரியாக 41.11 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் மாவட்ட வாரியாகப் பார்க்கும் போது அதிகபட்சமாக மேற்கு மெதினிபூர் மாவட்டத்தில் 44.68 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மால்டா மாவட்டத்தில் 38.22 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன. இந்த அமைதியான மற்றும் பாதுகாப்பான தேர்தலை உறுதி செய்ய 16 மாவட்டங்களில் 2,400 கம்பெனி ஒன்றிய பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வாக்குப்பதிவு ஒருபுறம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறுகள் ஏற்பட்டதாகப் புகார்கள் வந்துள்ளன. பிர்பூம் மாவட்டத்தின் சூரி தொகுதியில் காலை 7 மணிக்கு வாக்களிக்க வந்த காங்கிரஸ் வேட்பாளர் சஞ்சய் அதிகாரி, இயந்திரக் கோளாறால் அதிருப்தி அடைந்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இயந்திர கோளாறு காரணமாக என்னால் உரிய நேரத்தில் வாக்களிக்க முடியவில்லை, எனவே கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும் அல்லது மறுதேர்தல் நடத்த வேண்டும்’ என்று தெரிவித்தார். முர்ஷிதாபாத் மாவட்டத்தின் பெல்தங்கா, சம்ஷேர்கஞ்ச் மற்றும் கண்டி பகுதிகளில் தொழில்நுட்பப் பிரச்னையால் வாக்குப்பதிவு தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டது. மேலும், முர்ஷிதாபாத்தின் டொம்கல் பகுதியில் ஆயுதமேந்திய கும்பல் மிரட்டுவதாக எழுந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டது.

 

Related Stories: