பாஜ தொண்டர்களை தாக்கியதை கண்டித்து காவல் நிலையம் முன் ரோட்டில் அமர்ந்து போராட்டம் நடத்திய மாஜி பெண் டிஜிபி

திருவனந்தபுரம்: கேரள காவல்துறையில் டிஜிபியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஸ்ரீலேகா. கடந்த வருடம் பாஜவில் சேர்ந்த இவருக்கு மாநில துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டது. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் திருவனந்தபுரம் சாஸ்தமங்கலம் வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வெற்றி பெற்றால் மேயர் பதவி தருவதாக பாஜ தலைமை இவருக்கு உறுதி அளித்திருந்தது. ஆனால் மேயர் பதவி வழங்கப்படாததால் ஸ்ரீலேகாவுக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டது. இதனால் சில மாதங்கள் இவர் கட்சிப்பணியில் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்தார்.

இதைத் தொடர்ந்து சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் இவருக்கு திருவனந்தபுரம் வட்டியூர்க்காவு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன் பிறகு தான் இவர் கட்சிப் பணிகளில் ஈடுபடத் தொடங்கினார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் வட்டியூர்க்காவு பகுதியில் பாஜ-சிபிஎம் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

இதுகுறித்து அறிந்த வட்டியூர்க்காவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசார் மீது பாஜவினர் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு போலீஸ்காரரின் மண்டை உடைந்தது. இதைத் தொடர்ந்து தாக்குதல் நடத்திய பாஜவினரை போலீசார் கைது செய்து கொண்டு சென்றனர். அப்போது வாகனத்தில் வைத்து தங்களது தொண்டர்களை போலீசார் தாக்கியதாக பாஜவினர் புகார் கூறினர்.

இந்நிலையில் தொண்டர்களை தாக்கியதை கண்டித்து வட்டியூர்க்காவு காவல் நிலையம் முன் பாஜ மகளிர் அமைப்பினர் மறியல் போராட்டம் நடத்தினர். கொட்டும் மழையில் நடந்த இந்தப் போராட்டத்தில் ஸ்ரீலேகாவும் கலந்து கொண்டார். போராட்டக்காரர்களுடன் அவரும் காவல் நிலையம் முன் தரையில் அமர்ந்து போலீசைக் கண்டித்து கோஷம் எழுப்பினார். ‘காக்கிச் சீருடை அணிந்த குண்டர்களே, பினராயி விஜயனின் அடியாட்களே, போங்கடா போலீசே’… இது போன்ற கோஷங்களை தான் போராட்டக்காரர்களுடன் சேர்ந்து மாஜி டிஜிபியான ஸ்ரீலேகாவும் எழுப்பினார்.

Related Stories: