தமிழ் மொழி, அடையாளம், உரிமையை பாதுகாக்க திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்: ராகுல்காந்தி வேண்டுகோள்

புதுடெல்லி: தமிழ் மொழி, அடையாளம், உரிமையை பாதுகாக்க திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இன்று தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள வீடியோ செய்தி: வணக்கம். இந்த தேர்தல் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கும், பா.ஜ- அதிமுக கூட்டணிக்கும் ஒரு கொள்கை ரீதியான மோதல் ஆகும். அதிமுகவை பா.ஜ தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்து, அதன் மூலம் தமிழ்நாட்டிற்குள் கால்பதித்து விடலாம் என்றும், அதன் மூலம் தமிழ்நாட்டையும், தமிழ் கலாச்சாரத்தையும் , தமிழ் மொழியையும் அழித்து விடலாம் என நினைக்கிறது.

அதிமுக தலைவர்களை பொறுத்தவரையில் அவர்கள் பா.ஜவுக்கு இணக்கமாக இருக்கிறார்கள். காரணம் அவர்கள் செய்த ஊழல். மிகச்சரியாக சொல்ல வேண்டும் என்றால் டிரம்ப்புக்கு மோடி சமரச நிலையில் இருக்கிறார். அதே போல் மோடிக்கு அதிமுக சமரசமாக உள்ளது. அவர்கள் தமிழ்நாட்டை டெல்லியில் இருந்து ஆள நினைக்கிறார்கள். எங்களைப்பொறுத்த வரையில் தமிழ்நாட்டை தமிழ்நாடு மக்கள் ஆள வேண்டும், பஞ்சாயத்துகள் மூலம் ஆள வேண்டும், சட்டப்பேரவை மூலம், மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வர் மூலம் ஆள வேண்டும் என்று நினைக்கிறோம்.

தமிழ்நாட்டின் வரலாற்று பெருமை மிக்க சமூக நீதி காங்கிரஸ்- திமுக கூட்டணிக்கு உள்ளது. காமராஜரால் நிலைநிறுத்தப்பட்ட சமூக நீதி, திமுக- காங்கிரஸ் கூட்டணியால் தொடர்ந்து முன்னெடுத்து செல்லப்படுகிறது. எங்கள் அரசு பெண்களுக்கு, இளைஞர்களுக்கு, முதியவர்களுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது. எனவே தமிழ்நாட்டு மக்கள் எங்கள் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். அனைத்து காங்கிரஸ் தொண்டர்களும் திமுக வேட்பாளர்களுக்கு உதவ வேண்டும்.

மேலும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் உதவ வேண்டும். அதே போல் கூட்டணி கட்சியினரும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு உதவ வேண்டும். தமிழ்நாட்டில் சமூக நீதிக்கான ஒரு பெருமைமிகு வரலாற்றைக் காங்கிரஸ்-திமுக கூட்டணி கொண்டுள்ளது. அதனை முன்னெடுத்துச் செல்வதில் நாங்கள் உறுதியுடன் உள்ளோம். தமிழ்நாடு மக்களுக்கு எனது செய்தி: உங்கள் அடையாளத்தைப் பாதுகாக்க வேண்டும். உங்கள் மொழியைப் பாதுகாக்க வேண்டும். உங்கள் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: